மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (02.03.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2025-2026 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வானது விருதுநகர் மாவட்டத்தில் 99 தேர்வு மையங்களில் 9,855 மாணவர்களும், 11,715 மாணவியர்களும் மற்றும் தனித்தேர்வர்களாக 553 மாணவர்கள் என ஆக மொத்தம் 22,123 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 1235 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கோரிக்கைக்கேற்ப 146 பேர் சொல்வதை எழுதுபவர் பணிக்கு நியமிக்கப்பட்டு இவர்களுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply