“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 100-வது அமர்வு சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் திரு.த.நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் கிரிக்கெட்டில் ஆர்வம் உடைய 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு 100-வது “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் வீரர் திரு.த.நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 99 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஆர்வமிக்க மாணவர்களை அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும், அவர்களுக்கு சமூகத்தோடு இணைந்து உயர்வதற்கான வாய்ப்புகள் குறித்து பேசுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி இந்த காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியாகும்.
இதற்கு முன்பாக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், திரைத்துறை, ஊடகத்துறை என அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய சிறந்த படைப்பாளிகள் மற்றும் சாதனையாளர்கள் என இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.இன்று இந்த நிகழ்ச்சியின் 100-வது அமர்வுக்கு யாரை அழைக்கலாம் என்று சிந்தித்த போது, தன்னுடைய கடும் உழைப்பால், முயற்சியால் ஒரு முக்கிய இடத்தை பிடித்த ஒருவரை அழைக்க வேண்டும், அதைவிட முக்கியம் அவர் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவராக இருக்க வேண்டும்; என்று நினைத்தவுடன், கிரிக்கெட் வீரர் திரு.த.நடராஜன் அவர்கள் தான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம்.
ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், ஒரு இடதுகை பந்து வீச்சாளர், அதைவிட முக்கியமானது யாக்கர்; பந்து வீச்சில் சிறந்தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சிறந்த விளையாட்டு வீரர். விளையாட்டுகளில் கடினமான உழைப்பை செலுத்துகிறார். மேலும் விளையாட்டில் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் பெற்ற அந்த பலனை தன்னை போன்ற அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் பெற வேண்டும் என்பதற்காக தான், கடுமையாக இந்த விளையாட்டில் விளையாடி தான் ஈட்டிய பொருளை எல்லாம் வைத்து தனது சொந்த கிராமத்தில் ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தினை நிறுவியுள்ளார்.
அந்த கிரிக்கெட் அகாடமி மூலமாக அடுத்த தலைமுறைக்கு தான் பெற்றதை தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கக்கூடிய மாணவர்களை எல்லாம் ஊக்குவித்து, அவர்களுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அதைவிட முக்கியமாக அவர் வளர்ந்த சூழல், அவருடைய பின்புலத்தை எல்லாம் பார்க்கின்ற பொழுது, இவர் தமிழ் இளைஞர்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், அடுத்த தலைமுறைக்கும் எப்படிப்பட்ட உதாரணமாக இருக்கிறார் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த நிகழ்ச்சி.
ஒரு சாதாரண எளிய பின்புலத்தில் இருந்து வருகை தந்தாலும், எந்த துறையின் மீது தனக்கான ஆர்வம் இருக்கின்றதோ, எந்த துறையின் மீது தனக்கு விருப்பம் இருக்கின்றதோ, அவற்றை விடாமல் பற்றிக்கொண்டு அந்த வயதிற்கே உரிய கவனச் சிதறல்;களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, நான் எடுத்துக்கொண்ட உறுதியின் மீது தொடர்ச்சியான கடும் உழைப்பின் மூலமாகவும், குறிக்கோளை தொடர்ச்சியாக கைப்பற்றிக் கொண்டு நடப்பதன் மூலமாகவும், எப்படிப்பட்ட உயரங்களை தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் அடைய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் திரு.த.நடராஜன் அவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply