விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வருகின்ற 21.08.2024 முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகரில் புதிய பேருந்து நிலையத்தினை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வண்ணம், மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் 27.07.2024 அன்று விருதுநகர் மாவட்ட கூடுதல் நிருவாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டதன் படி விருதுநகரில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் நகர, புறநகர பேருந்துகள், மற்றும் பிற ஊர்களில் இருந்து விருதுநகர் வழியாக இயக்கப்படும் நகர மற்றும் புறநகர பேருந்துகள் கீழ்க்கண்டவாறு பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து மற்றும் அவ்வழியாக இயக்கிடவும் புதிய பேருந்து நிலையத்தினை 21.08.2024 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்:-
1. கோவில்பட்டி - (புறநகர்)
2. திருநெல்வேலி - (புறநகர்)
3. மதுரை - (புறநகர்)
4. கள்ளிக்குடி- (நகர்)
5. திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்-(புறநகர்)
6. தென்காசி, இராஜபாளையம் முதல் இராமேஸ்வரம் மார்க்கம்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் விவரம்:-
1. சிவகாசி- (நகர்)
2. காரியாபட்டி - (நகர், புறநகர்)
3. வடமலைக்குறிச்சி.
4. திருமங்கலம் - (நகர்)
5. பேரையூர்
6. அருப்புக்கோட்டை
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து,வழியாக இயக்கப்படும் பேருந்துகளை முழுமையான ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, NH-44 உள்ள கணபதி மில் சந்திப்பு பகுதியில் காவல் கட்டுபாட்டு அறையில் தொடர்ச்சியாக போதுமான காவலர்கள் பணியில் அமர்த்தவும், அரசு/தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் தலா ஒரு டைம் கீப்பர் பணி அமர்த்தப்பட்டு காலநேர பதிவேட்டினை முறையாக பராமரிக்கும் பொருட்டு பணியமர்த்தவும்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதிவேடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்ற பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் NH-44 உள்ள கணபதி மில் சந்திப்பு பகுதியில் போதிய வெளிச்சம் ஏற்படுத்திட தற்காலிகமாக விருதுநகர் நகராட்சி மூலமாக Focus Light அமைத்திடவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து எம்.ஜி.ஆர் சாலைக்கு திரும்பும் வலது புறம் வளைவு பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் இடது புறம் வளைவு பகுதியினை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், புதிய பேருந்து நிலையத்தினுள் பேருந்துகள் செல்வதில்லை என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழுமையான அளவில் புதிய பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக விருதுநகர் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாத அளவிற்கு புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் வரையறுக்கப்பட்டு, அதன்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே, திட்டமிட்ட படி புதிய பேருந்து நிலையம் வருகின்ற 21.08.2024 முதல் முழுமையாக செயல்படத் துவங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் , I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply