மூன்றாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி
விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (18.08.2024) துவக்கி வைத்தார்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டித்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 234 குழுக்கள் கலந்து கொண்டனர்.வினாடிவினா போட்டி மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல் நிலை எழுத்து தேர்வாக அமையும். இத்தேர்வில் 50 வினாக்கள் தமிழில் கொள்குறி வகையில் கேட்கப்படும்.
போட்டியில் மாணவர்கள் மூன்று பேர் கொண்ட அணிகளாக கலந்து கொள்ள வேண்டும். முதலில் நடைபெறும் எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 12 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அரையிறுதி நான்கு சுற்றுகளாக நடத்தப்படும்.
அரையிறுதியில் இருந்து சிறப்பாக செயல்படும் ஆறு அணிகள் இறுதி நிலைக்குத் தேர்வு செய்யப்படும். இறுதி நிலை ஆறு சுற்றுகளாக, நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.மேலும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது என்பது ஒரு அரசு பணியை பெறுவதற்கான ஒரு நல்ல முயற்சி. இன்றைய சூழ்நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்து அரசு பணியை பெறுவதற்கான போட்டி அதிகமாக இருக்கிறது. நிறைய நன்கு படித்த பட்டதாரிகள், நல்ல கல்வி பின்புலம் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மற்ற வாய்ப்புகள் இருந்தாலும் போட்டி தேர்வுகளுக்கு என்று நிறைய நபர்கள் படிப்பது என்பது உண்மையிலே நல்ல செய்தி.
இதில் மிக முக்கியமானது விரிவான அறிவு இருக்கக்கூடிய ஒரு மனித வளம் உருவாகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்கு அடுத்தபடியாக இந்திய அளவில் யூ.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் ஆண்டுக்கு சுமார் 3 முதல் 4 இலட்சம் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இதில் தமிழ்நாட்டில் இருந்து இந்தப் போட்டிகளுக்கு தயார் செய்யக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. தற்போது டி.என்.பி.எஸ்.சியில் இருக்கக்கூடிய கணிதம், திறனறிவு போன்ற பாடத்திட்டங்களோடு ஆங்கில அறிவும் கேள்விகளுக்கும் முயற்சி செய்தோம் என்றால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்திய அளவில் இருக்கக்கூடிய பணியிடங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். அடுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு சதவீதம் குறைவுதான். கடந்த முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு ஏறத்தாழ 20 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து, தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக இருந்தது. அதில் மிகவும் முனைப்போடு படிக்கக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை 20 விழுக்காடாக சுமார் 3 இலட்சம் போட்டியாளர்கள் மிக தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.
சிறிய அளவிலான மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கிடைக்காதவர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றவர்களின் பண்புகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் முழுமையாக அதில் ஈடுபாட்டோடு அவர்களுக்கு கிடைக்க கூடிய சிறிய சிறிய நேரங்களை கூட அந்த போட்டி தேர்வுக்காக தயார் செய்து கொண்டு இருப்பார்கள்.தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தான் போட்டித் தேர்வுகளில் உள்ள வினாக்களில் ஏற்படும் சிறு தவறுகளை தவிர்த்து மதிப்பெண்களை அதிகரிக்கலாம். இந்த போட்டித் தேர்வுக்கு தயார் செய்து ஒருவேளை வெற்றி பெற முடியாமல் போனால் கூட, இந்த தேர்விற்கு தயார் செய்யும் போது நீங்கள் பெற்ற அறிவும், நீங்கள் கற்ற உலக அறிவும், நீங்கள் வாசிக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகள் குறித்த அறிவும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்யும்.நாளை நீங்கள் உங்களது குடும்பம், குழந்தைகளை நல்லபடியாக வளர்ப்பதற்கும், நல்ல குடிமகனாக உருவாக்குவதற்கும் அவர்கள் சிறந்து விளங்குவதற்கும் அற்புதமான உங்களுடைய அறிவு நூற்றுக்கு நூறு வேலை செய்யும்.
பணியிடங்களில் அது குறித்து அறிவு இருக்க வேண்டும். அதனை முழு ஈடுபாட்டோடு கூடுதலாக உழைக்கும் போது, அது எந்த துறையாக இருந்தாலும் அதில் இருந்து வெற்றி அடைய முடியும். அரசு, தனியார் பணிகளோ அல்லது சுய தொழிலோ நீங்கள் செய்யும் போது இந்த இரண்டும் தான் மிக முக்கியம். அந்த இரண்டையும் நிச்சயமாக போட்டி தேர்வு தயார் செய்கின்ற போது, அந்த காலகட்டம் அதற்குரிய வலிமையை வளர்க்கும். தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய மனப்பான்மை, தோல்வி என்பது தற்காலிகமானது என்ற புரிதலும் போட்டி தேர்வுக்கு தயார் செய்யக்கூடிய மாணவர்களை தவிர வேறு எவருக்கும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி தேர்விற்கு தயார் செய்கிறார்கள். அவர்களெல்லாம் தமிழ்நாட்டினுடைய அறிவில் சிறந்த மனித வளத்தின் மிகப்பெரிய அடையாளங்கள். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு, இந்த வினாடி வினா என்பது அறிவுச் சார்ந்த நிகழ்ச்சி. இதன் மூலமாக நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
இந்த வினாடி வினா நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ள சங்க இலக்கியமும் திருக்குறளும் என்ற தலைப்பு, நம்முடைய மொழி சார்ந்து, நம்முடைய இலக்கியம் சார்ந்து இருக்கக்கூடிய புரிதலை நம்முடைய படித்த இளைஞர்களுக்கு ஏற்படுத்தும்.
நாளை இதில் இருக்கக்கூடிய பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரக்கூடிய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு அலுவலகங்களில் வருகின்ற போது, நீங்கள் செலுத்தக்கூடிய அந்த அதிகநேர பணிகளில் தமிழ் இலக்கியத்தின் உடைய தன்மையும், இலக்கிய மனத்தோடும் நீங்கள் செய்கின்ற போது நிச்சயமாக தமிழ் இலக்கியத்தினுடைய பெருமை இன்னும் பரவும். அதற்குத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.இந்த வினாடி வினா நிகழ்ச்சியினை இணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மரு.சங்கர சரவணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
0
Leave a Reply