பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (16.08.2024) மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத புண் வர காரணங்கள், பாதப்புண் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், தொடர் கவனிப்பு முறைகள் குறித்து அறுவைச் சிகிச்சைத்துறை மருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கால் இழப்புகளை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் ரூ.26.62 கோடி செலவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்புக்கு ஏற்ப மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்றுவிக்கும் அரங்கம் தொடங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்படவுள்ளன. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத அறுவை சிகிச்சை சேவைகள் வழங்கப்படவுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை கண்டறிதல் மற்றும் கால் இழப்புகளை தடுக்கும் மருத்துவ அறுவை இடையீட்டுகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று தொடங்கி வைக்கப்பட்டு, 2 நாட்கள் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு காலில் புண் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். அதனால் அவர்களுக்கு புண் வரும்பட்சத்தில் எவ்வாறு பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் கற்று கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் தேவையான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடிகிறது.உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் என்பது தவிர்க்க முடியாத சில பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய நோயாக உள்ளது. பாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் பாதத்தை இழக்கும் நிலைமை சமுதாயத்தில் ஏற்படும். எந்த நோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply