விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்.84-ன் மூலம் கடந்த 01.01.2019 முதல் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, சேமித்தல் மற்றும் விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 04.02.2024 நாளிட்ட அறிவிக்கை மூலம் ஒருமுறையே பயன்படுத்தும் ஒரு சிலவகையான நெகிழிப் பொருட்களைத் தடை செய்துள்ளது.ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு மூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களை விற்பனை மற்றும் சேமித்து வைக்கும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டு, அந்நெகிழிப்பொருட்கள் உள்ளாட்சி அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இருந்த போதிலும், சமீப காலமாக விருதுநகர் மாவட்டத்தில் நெகிழிப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக தொடர்ச்சியாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply