இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் (21.06.2024) தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சிறந்த கவிஞர்கள்,பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு படைப்பு ஊக்கத்தை தருவதற்காக தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய நிகழ்ச்சியின் தான் இளையோர் இலக்கிய பாசறை நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் திசைகள்தோறும் தமிழை கொண்டு செல்வதற்கும், மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் மூலமாக புதிய எழுத்தாளராக, கவிஞர்களாக, படைப்பாளராக உருமாற்றம் பெறுவதற்கும் மிக முக்கிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு சாதாரண அறிவியல் கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ கருத்து மாறாமல் ஒரு அழகிய நடையில் மாற்றுவதற்கு, தெரிந்த சொற்களை எப்படி லாபகரமாக கையாளுகிறீர்கள் என்பதுதான் இலக்கியமும், கவிதைகளும்.எந்த ஒரு படைப்பும் இந்த சமூகத்தில் பேசப்படாத சுமைகளை, குரல்களை பேசுகிறதா ,விளிம்பு நிலை மக்களின் குரலாக அவை பதிவு செய்யப்படுகின்றனவா என்பது முக்கியம்.மேலும், பத்தாண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய பஞ்சத்தை எல்லாம் நமது ஊர் பார்த்தது. அதாவது, அன்று தஞ்சையில் ‘நன்செய் நிலம் கொண்டு சாகுபடி ஆனது. இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது” என்ற கருத்தை கவிஞன் எழுதியிருந்தார். ஒரு சில எழுத்துக்களை மாற்றி,ஒரு பெரிய கருத்தை, வலியை இலக்கியத்தின் மூலம் மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கமாக இருந்தது. நமது கரிசல் பூமியில் எழுதப்பட்ட எத்தனையோ கவிதைகளும், கதைகளும் உள்ளன.
நமது மண்ணில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த சிறு கிராமம் என்றால், இந்திய அளவில் இரண்டு ஊர்களை நினைவு வைத்துள்ளது. அதில் ஒன்று இராஜபாளையம் மற்றொன்று தூத்துக்குடி என்பதாகும். 1920,1930,1940 ஆகிய காலகட்டத்தில் சுதந்திரத்தில் முக்கியமான போராட்ட காலமாக கருதப்படுகிறது. அதில் இந்த இரண்டு ஊர்களும் முக்கியத்துவம் ஆற்றியுள்ளது. இதுபோன்ற மக்களுடைய போராட்டங்களை இலக்கியங்கள் அந்தந்த கால கட்டங்களில் பதிவு செய்வது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.சங்க இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிறகு மருவி வந்த சங்ககால இலக்கியங்களும், நீதிநூல் இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பரவியுள்ள தமிழ் சங்கம் ஆகியவை எல்லா சிக்கல்களையும் தன்னுடைய கல்வி அறிவின் மூலமாக தான் தீர்வு கண்டுள்ளது.
இலக்கியங்களில் நாம் படித்து தெரிந்து கொள்வதற்கும், இலக்கியங்களின் மூலமாக அந்த காலகட்டத்தினை புரிந்து கொண்டு அதன் மூலமாக இந்த சமூகத்தில் விழுமியங்களை புரிந்து கொள்வதற்கும், விழுமியங்கள் நிறைந்த படைப்பாளர்களாக உருவாவதற்கும், இந்த சமூகத்தின் வலியை ஏழை எளிய மக்களினுடைய பாடுகளை பதிவு செய்வதற்கும், அதைவிட இலக்கியம் என்பது எப்போதும் குறிக்கோளோடும் இலக்கியத்தோடும் மட்டும் இருப்பதில்லை அது மன மகிழ்ச்சிக்கும் உரியது.தற்காலிகமாக போதைப் பொருட்கள் தரக்கூடிய மகிழ்ச்சியை விட வாசிப்பு அனுபவமும் இலக்கியமும் அதில் இருக்கக்கூடிய செல்வங்களும் நிறைய மகிழ்ச்சியை தருகின்றன. அவற்றை புரிந்து கொள்வதும் அந்த மகிழ்ச்சியினை எல்லோருக்கும் கடத்துவதும் படைப்பாளர்கள் உடைய நோக்கம். அப்படிப்பட்ட படைப்பாளர்களாக நீங்கள் இருக்கும் இடங்களில் குடும்பத்தை, சமூகத்தை சில அங்குலங்கள் உயர்த்துவதற்கு ஊக்கத்தை தரக்கூடிய படைப்பாளியாக உருவாக வேண்டும். உங்களை சிறந்த படைப்பாளர்களாகவும் அதைவிட மேம்பட்ட படிப்பாளிகளாகவும் உருவாக்குவதற்கு இந்த இலக்கியப் பட்டறை பயன்படுமேயானால் அதுதான் இந்த பட்டறையினுடைய வெற்றி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், பேராசிரியர் சிவகாசி திரு.ராமச்சந்திரன் அவர்கள் ‘மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” என்ற தலைப்பிலும், கலைமாமணி கவிஞர் கலாப்ரியா அவர்கள் “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்” என்ற தலைப்பிலும், ஒருங்கிணைப்பு அலுவலர்/திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” என்ற தலைப்பிலும், ஆசிரியர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் அவர்கள் “கண்களைத் திறந்த கதை உலகம்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவகர் அவர்கள் “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்” என்ற தலைப்பிலும், கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சோ.சிதம்பரநாதன் அவர்கள் ‘செம்மொழித் தமிழின் சிறப்பு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி செயலர் முனைவர் சிங்கராஜ் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள். அரியலூர் மாவட்டப் பதிவாளர் திரு.சு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரை வழங்கினார். பின்னர், இராஜூக்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திரு.மைதிலிராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
0
Leave a Reply