ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்த நிலையில், ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அங்கு முதல் நாளில் வெறும் 900 பேர் மட்டுமே படம் பார்த்ததாகவும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஜூலை 17-ஆம் தேதி ஒரே நாளில் 'அர்ஜுனன் பேர் பத்து', 'அருள்வான்', 'அன்பே டயானா', 'டார்க் ஹெவன்', 'கண் இமைக்கும் நேரத்தில்', 'நாடோடி கூட்டம்' உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் தங்களது வெளியீட்டு தேதியை மாற்றக்கூடும் என திரையுலகில் பேசப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்று போற்றப்பட்டவருமான எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.1938 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றார். 1956-ஆம் ஆண்டு வானொலி இசைப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது, அவரது இசைப் பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.திரையுலகில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடல், இன்று வரை தமிழ் இசையின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தார். குழந்தையின் மழலைக் குரல் முதல் முதியவரின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் பாடும் அபார திறமை அவருக்கே உரியது.நான்கு முறை தேசிய விருது பெற்ற ஜானகி, தமிழில் 'செந்தூரப்பூவே...' (பதினாறு வயதினிலே) மற்றும் 'இஞ்சி இடுப்பழகா...' (தேவர் மகன்) உள்ளிட்ட பாடல்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும், கேரள அரசு விருது 11, ஆந்திர அரசு விருது 9, தமிழக அரசு விருது 6, ஒடிசா அரசு விருது 1, பிலிம்பேர் விருதுகள் 20 மற்றும் இலங்கையின் 'ஞான கான சரஸ்வதி' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.2016-ஆம் ஆண்டு பாடகியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஜானகி, தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
'ஜமா' பட புகழ் பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'அன்பே டயானா'. இதில் ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் ரோஜா மற்றும் சேத்தன் நடித்துள்ளனர்.கதைக்களம்: ஒரு ஆங்கிலோ-இந்தியன் பெண்ணுக்கும், வட சென்னை பையனுக்கும் இடையே மலரும் சுவாரசியமான காதல் கதையே இப்படம்.ரிலீஸ் தேதி: படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல கன்னட நட்சத்திரமான உபேந்திரா, தமிழில் 'சத்யம்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.தற்போது இவர் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, நடிகர் அதர்வா நடிப்பில் ஒரு அதிரடி (Action) கதையை இயக்கவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் படத்தில், ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க உபேந்திரா கமிட்டாகியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்ட்டி பங்காரம்' (தமிழில் எங்கள் தங்கம்) திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.இதுகுறித்து பேசிய சமந்தா, "மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்பியதால் படம் எப்படி வரவேற்கப்படும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் பட்ஜெட்டை மீட்பதே முதன்மை இலக்காக வைத்தோம். அதற்கு மேல் கிடைக்கும் வசூல் எங்களுக்கு போனஸ் என்றே நினைத்தோம். இப்போது அந்த போனஸ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது," என்றார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரான கோவை ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, 'ஜி.டி.என்'என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் ஜி.டி. நாயுடுவாக நடிகர் மாதவன் நடித்துள்ள நிலையில், பிரியாமணி, துஷாரா விஜயன், ஜெயராமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாதவன், "இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகள் பலருக்கும் தெரியாமல் போய்விடுகின்றன. அந்த வரலாற்றை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்" என்றார்.
கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்திறமையுடன் விளங்கி வரும் ராஜ் பி. ஷெட்டி, தற்போது தமிழில் அறிமுகமாகிறார். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்'திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டில் இதுவரை வெளியான 125 தமிழ் படங்களில் மிகச் சில படங்களே வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி 2' ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி 'அரூபி', '2026 இதயம் முரளி', 'லவ் ஓ லவ்', 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு', 'முதற்கனல்' ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது சொத்துகளை அறக்கட்டளைக்கு வழங்கியதன் மூலம் ஏற்கனவே கவனம் பெற்றிருந்தார். தற்போது, தனது மறைவுக்குப் பிறகு இறுதி ஊர்வலத்தில் ஒலிக்க வேண்டிய பாடலையும் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடலை அவர் உயிரிழந்த பிறகே வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.