விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் உலகளவில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி நடைபோட்டு வருகிறது.இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "ரூ.50 கோடியைத் தாண்டிய எனது முதல் படம் இது. மறக்க முடியாத தருணம். இந்த வெற்றியை கொண்டாடிய அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலம். இனியும் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து உங்களை மகிழ்விக்க தொடர்ந்து உழைப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கும் 'ஓம்'படத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளார். 'ஹே ராம்' படத்திற்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமிழில் 'ஜெயிலர் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக 'வெல்கம் டூ வைல்டு லைப்' படத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜூ இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகிறது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் 'தாதா' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் ராவ் கங்குலியாக நடிக்க, விக்ரமாதித்யா மோத்வானே இயக்குகிறார். கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டரில், லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியை கழற்றி கொண்டாடிய அவரது புகழ்பெற்ற தருணம் இடம்பெற்றுள்ளது. படம் அடுத்த ஆண்டு மே 14-ம் தேதி வெளியாகிறது.
1989-ல் மோகன்லால், பார்வதி, திலகன் நடித்த மலையாள வெற்றிப்படமான 'கிரீடம்', டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படமே பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் மற்றும் வி.சி. குகநாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் பலர் களமிறங்கியுள்ளனர்.
பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் உள்ளிட்டோர் இணைந்து 'காற்றில் எந்தன் கீதம்' பாடலைப் பாடி இசை மரியாதை செலுத்தினர்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்') உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. சமந்தாவின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் படமாக இது அமைந்துள்ளது.
ராதிகா நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' திரைப்படம் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது. படத்தின் 100-வது நாள் விழாவில், இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன