இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளது.இப்படத்தை இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.முதலில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இந்த முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்தநாள் செப்டம்பர் 16 என்பதால், அதே நாளில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யானை மரம்’. இதில் மாஸ்டர் அபினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பதையும், அந்த சிறுவனுக்கும் யானை மரத்திற்கும் இடையேயான நட்பையும் இப்படம் பேசுகிறது. இதுவரை 16 நாடுகளில் திரையிடப்பட்டுள்ள இப்படம், 20 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
இந்தாண்டில் கடந்த வாரம் வரை தமிழில் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த வாரம், செப்டம்பர் 10-ம் தேதி கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, சூரியின் ‘மண்டாடி’மற்றும் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகலாம்.
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் ஆண்டனி வர்கீஸ். சமீபத்திய பேட்டியில் தனது தவறவிட்ட வாய்ப்பு குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.“விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. விஜய் சார் இப்போது முதல்வராகிவிட்டார். இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். அந்த வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் இப்போதும் அதிகமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தை அரவிந்தராஜன் இயக்குகிறார்.படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காக செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு, அங்கு நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. இதில் காவல்துறை அதிகாரியாக எம்.எஸ். பாஸ்கர் நடிக்கிறார்” என்றார்.
திரையுலகில் 50-வது ஆண்டில் பயணித்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா, தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கும் அவர் இசையமைக்கிறார். இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் உருவாகும் 25-வது படம் இது.காசிமாயன் இயக்கும் இப்படத்தில் செந்தில், கோவை சரளா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து நடிக்கின்றனர்.
நடிகர் அஜித் கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்தில் நடைபெறும் ‘மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை’ கார் பந்தயத்தில் அஜித்தும், அவரது அணியும் பங்கேற்கின்றனர்.தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் 16-ம் தேதி வரை லண்டன் செல்ல உள்ளார். அப்போது தனது ஓய்வு நேரத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் சென்று பார்க்கலாம் என்றும், அஜித்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தெலுங்கிலும் இதுவரை மூன்று படங்களில் நடித்திருந்தாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘இருமுடி’படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள இப்படம் அப்பா–மகள் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது.10 வயது சிறுமியின் தாயாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த வெற்றி மூலம் தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘Avengers: Endgame’திரைப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.ரூசோ சகோதரர்கள் இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.தற்போது சில புதிய காட்சிகள் இணைக்கப்பட்டு ‘Avengers: Endgame – Encore’ என்ற பெயரில் செப்டம்பர் 25-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.மேலும் டிசம்பர் 18-ல் வெளியாகவுள்ள புதிய ‘Avengers: Doomsday’படத்துடன் தொடர்புடைய சில அம்சங்கள் இந்த புதிய பதிப்பில் இடம்பெறுவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சூரி மற்றும் மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம் பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் கடலோர மக்களின் கலாசாரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளையாட்டு–ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்கள் முழுமையாக அனுபவிக்கும் வகையில், IMAX திரைகளிலும் ‘மண்டாடி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.