“பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுக்கான உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றிய போது “பட்டாசு தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்” என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் : 13, நாள் 12.02.2025 ன் படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த பெற்றோர்களின் கல்வி பயிலும் வாரிசுகளில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000-ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.6,000 -ம் ஒரு தடவை பணப்பலனாக அளிக்கப்படும். மேலும் பராமரிப்பு செலவினங்களுக்காக 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒவ்வொரு வாரிசுக்கும் பெற்றோரில் ஒருவரை விபத்தில் இழந்திருந்தால் ரூ.2,000-ம் பெற்றோர் இருவரையும் இழந்திருந்தால் ரூ.4,000-ம் மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.
மேலும் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் பொறியியல் மற்றும் பிற தொழிற் பட்டயப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணமும், தொழிற்நுட்பக் கல்வி, செவிலியர் மற்றும் பிற பட்டயப் படிப்புகள் பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரையும் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
10.11.2024 அன்றோ அதற்கு பிறகோ மேற்சொன்ன அரசாணையில் கூறியுள்ள விதிகளின் படியான தகுதியான பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம் மற்றும் தொடர்பு அலைபேசி எண், முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “இணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் , கதவு எண்: 4, NPSN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மஹால் முதல் தளம், சிவகாசி - 626 123” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் படியும், விபத்தில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பும் படி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய 98659-58876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447-45064 (இணை இயக்குநர், சிவகாசி) அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply