விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.11.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகள் மனுக்களை தொடர்ச்சியாக அளிக்காமல் நடவடிக்கை விபரங்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டறிய அறிவுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்து கொண்டு விவசாயிகளின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
வனவிலங்குகளால் பயிர் சேதம் அதிகஅளவில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், நிவாரணத்திற்கு நடவடிக்கை எடுத்து பயிர் இழப்பீடு உடனடியாக வழங்கவும், வனவிலங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழுக்கள் மூலமாக உரிய மேல் நடவடிக்கைகளை எடுத்து, வன விலங்குளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அத்திகுண்டு முதல் கல்லுக்கட்டு ஊரணி வரை தார்ச்சாலை அமைக்க தொடர் நடவடிக்கை எடுக்குமாறும், நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பல்வேறு நகராட்சிகள்,மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்தவும், நீர் நிலைகளை மாசுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) திருமதி அ.அம்சவேணி , வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி மு.சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி , செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி செல்வி, இணை பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள் உட்பட பல துறை அரசு அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
0
Leave a Reply