“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியின் 200-ஆவது அமர்வு சிறப்பு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், இளநிலை மற்றும் முதுகலை வணிக மேலாண்மைத்துறை பயிலும் 100 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட சிறப்பு காபி வித் கலெக்டர் - 200- ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஹட்சன் அக்ரோ நிறுவனத்தலைவர்/மேலாண்மை இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.ஜி.சந்திரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் "காபி வித் கலெக்டர்" நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பல்வேறு தனித்திறமைகள் இருந்தாலும், அத்திறமைக்கேற்ற வாய்ப்புகளை அறிந்து, அதனை அடைவதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன என்பது குறித்து, தற்போதைய மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு பொருளாதார மற்றும் சமூக நிலையை அடைய வழிகாட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கான எதிர்கால திட்டங்கள், அவர்களுடைய கனவுகள், அவர்களுடைய சிந்தனைகள் அடுத்து வரக்கூடிய ஒரு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வாழக்கூடிய இந்த சமுதாயத்தில் எந்த விதமான மாற்றங்களை விரும்புகிறார்கள். அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வாய்ப்புகள் இந்த உலகில் எங்கெல்லாம் இருக்கின்றன. தங்களுடைய இந்த பதின் பருவத்தில் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களெல்லாம் தங்களுடைய இந்த பள்ளிப் பருவ காலத்தில் இருந்து எந்தெந்த கனவுகளை எல்லாம் அவர்கள் காண முடியும். காணக்கூடிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான உத்வேகமும், வாய்ப்புகளும், வழிமுறைகளும் எங்கெல்லாம் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கும், அவர்கள் தங்களுடைய ஆசைகளை, கனவுகளை உருவாக்கிக் கொள்வதற்கும், வகுப்பறைகளுக்கு வெளியே இது போன்ற ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அவர்களால் நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்து, நமது மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறை ஏறக்குறைய 90 நிமிடங்கள் சராசரியாக ஒவ்வொரு பள்ளிக்கும் அல்லது குழுவாக வரக்கூடிய அந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுதலும், அவர்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்வதிலும், கருத்துக்களை எப்படி செயல்படுத்துவது, இலட்சியங்களுக்கு, ஆசைகளுக்கு, கனவுகளுக்கு எப்படி செயல் வடிவம் தருவது. அவர்கள் எதையெல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலான தகவல்களை தருவது என இந்த காபி கலெக்டர் நிகழ்ச்சி மாவட்டத்தில் சிறப்பாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் படிப்பு மட்டும் போதாது. வாழ்க்கையில் மாறி வரும் தொழில்நுட்பம், சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். தடை என்பது வெற்றிக்கான படிக்கல்தான். உங்களுடைய உயரம் என்ன என்பதை உங்களுடைய எண்ணம் தான் தீர்மானிக்கிறது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் தெளிவான விடை கொடுத்ததாகவும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
0
Leave a Reply