வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் இன்று(14.05.2025) வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு உழவு பணிகளில் ஈடுபடுத்த இயலும். டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதே போன்று, பவர் டில்லர்கள் போன்ற வேளாண் இயந்திரங்களும், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர் மற்றும் கருவிகளும் விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவ்வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும் பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அதனை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில் வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செயல்படும், வேளாண் பழுதுபார்க்கும் நடமாடும் வாகனத்தின் மூலம் 10 டிராக்டர்கள் பழுதுபார்க்கப்பட்டது. மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முகாமிற்கு கொண்டு வந்து பயன்பெற்றனர்.மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், விசை களையெடுக்கும் கருவி, ரோட்டவேட்டர், இதர உழவுக் கருவிகளும் மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு, முறையாகப் பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு 14 காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களின் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு, வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகளிடம் நேரில் கலந்துரையாடி தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். புதிய மற்றும் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவை முகாம்களில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து அவ்வியந்திர உற்பத்தியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக் கூடியது மற்றும் செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு குறித்த தெளிவுரை வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுரை வழங்கப்பட்டது.
இம்முகாமில் கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் படிக்கும் 300 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply