விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (30.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை மைதான சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டம், ஆவியூர் - பந்தல்குடி தேசிய நெடுஞ்சாலை பாளையம்பட்டி விலக்கு பகுதிகளில் உள்ள புறவழிச் சாலை பிரிவு வரும் இடங்களில் வாகனங்களுக்கு வழிகாட்டி பதாகைகள், மிளிரும் ஸ்டிக்கர்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் அமைப்பது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சேதுபதி அரசு தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல், வாசிப்பு திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
திருச்சுழியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். திருச்சுழியில் கால்நடை மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, மருந்துகளின் இருப்பு, மருத்துவர்களின் பணி நேரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், உடையனம்பட்டி கிராமத்தில் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், முத்தநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு அளித்தததின்பேரில் பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாவினை பயனாளியின் வீட்டிற்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், தமிழ்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளத்தின் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், குலசேகர நல்லூர் ஊராட்சியில், வனத்துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகர நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பதிவேடுகள், கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும்; உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்.,த.கா.ப., அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply