சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 18.06.2025 காலை 09.00 மணி முதல் மறுநாள் 19.06.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, சாத்தூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.31.30 இலட்சம் மதிப்பில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சாத்தூர் நகராட்சியில் 2025-2026-ம் ஆண்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.79 கோடி மதிப்பில் வெம்பக்கோட்டை சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைதொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நென்மேனி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.மேலும், நென்மேனி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (PMGSY) கீழ் ரூ.18.25 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, நென்மேனி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.மேலும், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply