நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி !
சிறு வயதில் இருந்தே எங்கள் குடும்பத்தினருடன் பழகிய இவர், குழந்தைக்குரிய அத்தனை விஷமங்களையும் கூடவே செய்து கொண்டிருப்பார். கோபாலகிருஷ்ணன் டாக்டரின் வீட்டிற்கு கடைக்குட்டியான இவருக்கு செல்லம் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட கண்ணன், டாக்டர் ஆனவுடன் இவ்வளவு சேவை மனப்பான்மையுடன் செயலாற்றுவார். என்று நான் கனவிலும் நினைத்த தில்லை. நான் 'டாக்டர்' என்றால் 'என்ன டாக்டர்', கண்ணா'ன்னே கூப்பிடுங்க என்பார். அவர் மனதில் எள்ளளவு கூட நான் என்ற கர்வம் இருந்ததே இல்லை.
கண்ணா டாக்டர் எளிமையாக 2 வீலர்லேயே வருவார். நான் கூட ஒருமுறை ‘என் கண்ணா ’,கார்ல வா கண்ணா' என்பேன். இதுதான் சௌகர்யம், ரோடுலே நுழைந்து, நுழைந்து சீக்கிரம் வரலாம் , கார் ரொம்ப லேட்டாகும் என்பார் அவ்வளவு எளிமை.
டாக்டர் பீஸ் ரொம்ப ,ரொம்ப கொஞ்சம் தான், என் தந்தையாரிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். என் தகப்பனார் P.C. பலராம ராஜா அவர்கள், கண்ணா பீஸ் கொஞ்சம் கூட்டி சொல்லுங்கள் என்பார், கேட்கவே மாட்டார். பாவம் மக்கள் என்பார்.
எனக்குத் தெரிந்து பல நாள் நேரத்தோடு சாப்பிடாமல், தூங்காமல் பலருக்கு வைத்தியம் செய்துள்ளார். பல பெரிய நோய்களை மருத்துவர்கள், பல டெஸ்ட்கள் செய்து அதற்குப் பின் தான் மருத்துவம் செய்வார், ஆனால் டாக்டர் கோபால கிருஷ்ணன், டாக்டர் சங்கரராமன், டாக்டர் கண்ணா அவர்கள் நாடி, ஸ்டெதெஸ்கோப் வைத்தே துல்லியமாக நம் நோயைக் கணித்து, சென்னை, மதுரை டாக்டர்களுக்கு பரிந்துரை செய்து, அங்கு சென்று வைத்தியம் செய்யச் சொல்வார். எல்லா சோதனைகளையும் செய்த மருத்துவர்கள், உங்கள் ஊரில் நோயைச் சரியாகக் கணித்து சொல்லும் மருத்துவரை வியந்து பாராட்டியுள்ளனர்.
டாக்டர் ராஜகேசர் (எ) கண்ணன். அவர்கள் மறைவை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகின்றனர். இராஜபாளையம் நகர மக்கள். நம் நகர மக்களால் "கண்ணா டாக்டர் " என்று அவரவர் வீட்டு பிள்ளை போன்று அழைத்துக் கொண்டு வாழ்ந்த முதியவர்கள் பலர், நான் பெற்ற பிள்ளைகள் கூட வேண்டாம் 'கண்ணா' வந்தாலே போதும் என்று தைரியமாக வாழ்ந்தனர். பல முதியவர்கள், உடம்பு சௌகர்யமில்லை. என்றால் கண்ணா டாக்டருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைக்கும் பல பெரியவர்கள். ‘சரி வரேன் ’என்று நேரத்தை சொல்வார் கண்ணன். அந்த நேரத்தில் 99 % சரியாக வந்து ஏ...வி.. வேகியா (காய்ச்சலா) என்று இன்முகத்துடன் கூறி வைத்தியம் செய்து 'அன்னி சரிகாபோணு' (இதெல்லாம் சரியாகி விடும்) என்று தெலுங்கில் கூறி ஊசி மருந்து, மாத்திரை கொடுத்து செல்வார். முதியவர்களிடம் 5 நிமிடம் குசலம் விசாரித்து, அவர்களின் பாரங்களை தான் ஏற்றுக் கொண்டு, தன் உயிரை தியாகம் செய்து விட்டார், என்று கேட்ட பொழுது பேரதிர்ச்சிதான்.
நம் நகர மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து விட்டு ,அவர் சிறிதும் கஷ்டப்படாமல், தன் பணியினை முடித்துக் கொண்டார். அன்னாரின் ஆன்மா நிம்மதியாக இறைவனிடம் இளைப்பாற பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்.
அன்னாரது குடும்பத்தினருக்கு இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமதி. B. குணாபாஸ்கர் ராஜா.
0
Leave a Reply