சமுதாய வளைகாப்பு விழாவில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அமலா திருமண மண்டபத்தில் (03.03.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழ்நாடு அரசின் சார்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அந்த நாட்டில் வலுவான தலைமுறையினரை நாம் உருவாக்க வேண்டும். ஒரு சமுதாயம் எழுச்சிமிக்க சமுதாயமாக, தலை நிமிர்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும். நமக்கு பின்னால் வரக்கூடிய தலைமுறைகள் நிறைந்த அறிவாற்றல் பெற்றவர்களாக இருந்தால்தான், இனி வரக்கூடிய காலங்களிலே நம்முடைய வலிமையை உலகத்தில் நிரூபிக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கக்கூடிய குழந்தைகளை எதிர் காலத்தில் நாம் உருவாக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு கல்வி முக்கியம். அந்த கல்வியை உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரு நல்லாட்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது. கல்விக்கு அடுத்து நாம் எதிர்கால தலைமுறைகளாக இருக்கக்கூடிய குழந்தைகள் நல்ல உடல் நலத்தோடும், ஆரோக்கியமாக இருந்தால் தான் கல்வி கற்றல் மூலம் கிடைக்கக்கூடிய பயன்களை பெற முடியும்.எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கல்வி மற்றும் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. ஒரு அருமையான சமுதாயத்தை, எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய கடமையையும், பொறுப்பையும் கர்ப்பிணி தாய்மார்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த பொறுப்பை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிற போது, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும், உங்களின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயலாற்றி வருகிறது.தமிழ்நாடு அரசு பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர்க்கான பேருந்து பயணம் திட்டம், புதுமைப்பெண், மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பத்மாவதி, பேரூராட்சி தலைவர்கள் திரு.செந்தில்(காரியாபட்டி), திரு.துளசிதாஸ்(மல்லாங்கிணறு), முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், திரு.செல்லம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply