ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் (13.10.2026) நடைபெற்றது.ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், நகர்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் நடைபெறும் திட்டப்பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் கிராம யோஜனா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்(விபிஜிராம்ஜி), நபார்டு திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மான்யம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஃபேவர் பிளாக் மற்றும் தார் சாலை, சுடுகாடு, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும், கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள், கிராமப்புற நூலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன்மன், தொல்குடி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். சாலை பணிகள், குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply