தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் நர்சிங் பள்ளி அல்லது கல்லூரி நிறுவனங்களின் மீது அரசு விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி குற்ற வழக்காக (Criminal Case) கருதி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாட்டில் நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் ஆகும். இத்தகைய கவுன்சில்களின் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகளில் பயில்வதே முறையான கல்விக்கு வழி வகுக்கும். அதனால் நர்சிங் படிப்பு பயில விரும்பும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்வு செய்யும் நர்சிங் பள்ளி அல்லது கல்லூரியானது அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கு www.tamilnadunursingcouncil.com/recognised_institutions.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் செவிலியர் மற்றும் மிட் ஒய்ப்ஸ் கவுன்சில் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட படிப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் ஆகும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. Certificate Course in Auxiliary Nursing- Midwifery - 2 Years
2. Diploma in General Nursing & Midwifery - 3 Years
3. B.Sc., (Nursing) - 3 Years
நர்சிங் பயிற்சி (Nursing Training) என்ற பெயரில் பல பெரிய / சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி, நர்சிங் டிப்ளோமா மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாக மக்கள் குறை தீர்க்கும் நாளில் நேரிலும் இணையதளம் மூலமாகவும், ஏராளமான புகார்கள் சமீப காலமாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே, மேற்காணும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை மட்டும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கூறிய படிப்புகள் தவிர அங்கீகரிக்கப்படாத படிப்புகளை அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் / கல்லூரிகளில் படித்தால் அரசுப் பணியில் சேர முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மாணவ மாணவியர்கள் எந்த ஒரு மருத்துவமனைகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட செவலியராக பணிபுரிய இயலாது மற்றும் நர்சிங் கவுன்சிலில் இப்படிப்பினை பதிவு செய்ய இயலாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறு பணிபுரிவதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வந்தால் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் மற்றும் குற்ற வழக்காக (Criminal Case) கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, இத்தகைய நிறுவனங்கள் தானாக முன்வந்து அங்கீகாரமில்லாத பயிற்சிகளை நிறுத்திவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய நிறுவனங்களின் மீது அரசு விதிகளின்படி அபராதமும் மற்றும் சட்டப்படி குற்ற வழக்காக (Criminal Case) கருதி உரிய மேல்நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.மேலும், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் நர்சிங் படிப்பு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்துகொள்ள 97912-60017 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply