இராஜபாளையம் கூட்டு உள்ளுர் திட்டக் குழும பகுதிக்கான முழுமைத் திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரியில் (03.07.2024) விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பாக இராஜபாளையம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய இராஜபாளையம் கூட்டு உள்ளுர் திட்டக் குழும பகுதிக்கான முழுமைத் திட்டம் (Master Plan) அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு வாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடியிருப்பு வீடுகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வெளியேற்றத்திற்கான வசதிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பராமரிப்புடன் கூடிய பசுமை பூங்கா, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், இராஜபாளையம் நகராட்சி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய 149.05 சதுர கி.மீ. சுற்றளவு பகுதிகளை இராஜபாளையம் கூட்டு உள்;;ர் திட்டக் குழுமப் பகுதியாக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கூட்டங்கள் வாயிலாக கருத்துக்களை பெற்றும், நகரின் புவியியல் அமைப்பு, போக்குவரத்து, மக்கள் தொகை ஆகிய தகவல்களின் அடிப்படையில் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இத்திட்டம் ஒருங்கிணைந்த திட்டம் என்பதால், ஏற்கனவே இருக்கக்கூடிய உட்கட்டமைப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஒருங்கிணைத்து செய்யப்படும்.அனைத்து துறைகளும் ஒவ்வொரு திட்டப்பணிகளையும் மேற்கொள்ளும் போதும், மாஸ்டர் பிளானில் இருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி செய்யப்படும். இதன் மூலம் சில நேரங்களில் ஒரு வேலையை பல முறை செய்வதை தவிர்க்க முடியும்.
மாஸ்டர் பிளான் எல்லா தகவல்களையும் முறையாக ஆய்வு செய்து பலரின் உடைய கருத்துக்களை கேட்டு, நகரத்தின் 50 ஆண்டுகால வளர்ச்சிக்கு எது சரியாக இருக்கும் என்றும், ஒவ்வொரு துறையின் சார்பாக முன்னேற்றத்திற்கு எது சரியாக இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் போது புதிய கருத்துக்கள் தொடர்பாக ஏதேனும் விவாதம் ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, இத்திட்டத்தினை அனைவரும் புரிந்து கொண்டு, திட்டம் முழுமை அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (பொ) திருமதி நந்தினி, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் திருமதி நிர்மலா ராஜா, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply