தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைதுறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், தாயில்பட்டியில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கினை, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,.I A S., அவர்கள் (13.09.2024) துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2 இலட்சம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கான பணி ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.15,000/- மானியத்தில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டியினையும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கான பணி ஆணைகளையும், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7500/- மானியத்தில் வெண்டை விதைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.நமது மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தாலும், விவசாயம் அதிகம் செய்யக்கூடிய பகுதியாக உள்ளது.
குறிப்பாக மானாவாரி பயிர்கள் அதிகமாக விளைவிக்கக் கூடியதும், மக்காச்சோளம் பருத்தி போன்ற பயிர்கள் அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ விளைவிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. வேளாண்மை என்பது அது சார்ந்த உப தொழில்களையும் கொண்டது. அதில் கால்நடை வளர்ப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கால்நடைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஒரு மாவட்டம் விருதுநகர். அதற்காகத்தான் சமீபத்தில் தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்காக 9 புதிய நடமாடும் மருத்துவமனை ஊர்தியை வழங்கியுள்ளது.கால்நடை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாக விவசாயி பெருங்குடி மக்களுடைய வாழ்வாதாரத்தை, அவர்களுடைய வருமானத்தை உயர்த்த முடியும். இந்த பகுதியில் சிப்பி காளான் வளர்ப்பினை நிறைய மகளிர் சுய உதவி குழு பெண்கள் செய்து வருகிறார்கள்.வேளாண்மை சார்ந்த உப தொழில்களை செய்வது என்பது தான் வேளாண்மையுடைய வளர்ச்சிக்கு ஒரு அடிப்படையாக அமைகிறது.
விவசாயினுடைய வருமானத்தை பெருக்குவது என்பது பயிர்களில் இருந்து வரக்கூடிய சாகுபடி, தவிர மற்ற உபதொழில்களையும் சேர்த்து செய்கின்ற பொழுது தான் லாபகரமாக செயல்படுத்த முடியும். அதனால் தான் நிறைய வேளாண் சார்ந்த உப தொழில்களான கால்நடை, நாட்டுக்கோழி, தேனீ வளர்ப்பு ஆகியவற்றை அரசு ஊக்குவித்து வருகிறது.தேனின் மருத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப்படுத்துகிறது. தேனுக்கான தேவை என்பது மிக அதிகமாக இருக்கிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும்.மாவட்டத்தில் பல்வேறு விவசாயிகள் தேனீ வளர்ப்பு முறையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதை சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தை படுத்த வேண்டும்;. தரமான தேன்களுக்கு தேவைகள் அதிகமாக உள்ளது.
இந்த தேனீ வளர்ப்பு என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் கூடுதல் வருமானத்தை தரக்கூடியது. எனவே, விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீவளர்ப்பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் தேனீ வளர்ப்புக்கு இருக்கக்கூடிய புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறையினரின் தேனீ மகத்துவ மையம் மற்றும் மதுரை மாவட்ட தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயி ஆன திருமதி.ஜோஸ்பின் அவர்களால் தேனீ மற்றும் தேன் சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.இக்கருத்தரங்கின் முதல் நாளில் தேனீக்களின் உயிரியியல் மற்றும் குணாதிசயங்களை பற்றி பூச்சியியல் துறை முனைவர் கே.சுரேஷ் அவர்கள் விளக்கினார். தோட்டக்கலை பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை முனைவர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் கலசலிங்கம் தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் திரு.பாண்டியராஜ் அவர்கள் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.
தேன் சம்பந்தப்பட்ட உற்பத்திப்பொருட்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பற்றி VIBIS Honey நிறுவனர் மற்றும் தேனீ வளர்ப்பின் முன்னோடி விவசாயிமான திருமதி ஜோஸ்பின் அவர்கள் எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் நிலைய முனைவர் திருமதி.ஜடா கவிதா அவர்கள் தேன் சம்பந்தப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பை பற்றி விளக்கமளித்தார்.மேலும், தேனீ வளர்ப்பு குறித்த தொழில் நுட்ப கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ், விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்(வெம்பக்கோட்டை வட்டாரம்) திருமதி குணசெல்வி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள்;, விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply