நிலை தடுமாறிக் கீழே விழும் முதியோர்.
வயது ஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும், உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது. சிறுமூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் நிலை தடுமாறிக் கீழே விழும் வாய்ப்புண்டு. இந்த மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியோர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.
முதியோர் பராமரிப்பாளரின் பணி
தங்கும் அறையின் தரை, குளியல் அறை மற்றும் கழிவறை வழுக்கும் இடமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதியோர்நடமாடும் இடத்தில் தண்ணீர் கீழே சிந்தாமல், ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உதவியாளர் ஒருவரை எப்பொழுதும் உடன் இருக்கச் சொல்ல வேண்டும்.
மிதியடிகள் காலுக்குப் பொருந்துவது போல அணிய வேண்டும். குதிகால் உயரம் அதிகமுள்ள மிதியடிகளை அணிய வேண்டாமென்றும் அறிவுரை கூற வேண்டும். கட்டிலின் உயரம், முதியோர் உட்கார்ந்து எழுந்திருக்க வசதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இருபுறமும் தடுப்புக் கம்பிகள் போட்ட கட்டிலை உபயோகிக்கச் சொல்ல வேண்டும்.
பார்வை நன்றாகத் தெரிய தகுந்த கண்ணாடிகளை அணியச்சொல்ல வேண்டும்.
அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைக் கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்கவேண்டும்.
விழும் காரணத்தை அறிந்து அதற்குரிய மருத்துவச் சிகிச்சை பெறச் சொல்ல வேண்டும்.
நடக்கும்போது கைத்தடி, வாக்கர் உதவியுடன் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
முதியோர் நடமாடும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
படிக்கட்டுகளின் கைப்பிடிகள் உறுதியானதாகவும், படிகள் ஒரே அளவு உயரமாகவும், அகலமானதாகவும், வழுக்காமலும் இருக்க வேண்டியது அவசியம்.
முதியோர்கள் சாப்பிடும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் பக்க விளைவுகளால்கூடக் கீழே விழ வாய்ப்புண்டு.
படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து, உடனே நடக்கக்கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர். எழும்போது முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பிறகு, சற்றுநேரம் கழித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.
0
Leave a Reply