பயிர் சாகுபடியில் டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை நெல் 1496 ஹெக்டேர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ளது. அதுபோல் சிறுதானியங்கள் 329 ஹெக்டேர் பரப்பளவிலும் பயறு வகை பயிர்கள் 277 ஹெக்டேர் பரப்பளவிலும் எண்ணெய் வித்து பயிர்கள் 662 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 319 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதியஅளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளகூட்டுறவு மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களில் யூரியா 3491 டன், டி.ஏ.பி 780 டன்,பொட்டாஷ் 393 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2339 டன் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் காம்பளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த உரம் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய்வித்து பயிர்களில் டி.ஏ.பி.உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் பொழுது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கின்றது. எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய்வித்து பயிர்களுக்கு சல்பர் சத்து அத்தியாவசியமானதாகும்.
மண்ணில் டி.ஏ.பி. உரமிடும் போது மண்ணில் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது குறைவாகவே உப்பு நிலை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியாக டிஏபி உரத்தினை பயன்படுத்துவது மண்ணில் உள்ள ஊட்ட சத்துக்களின் சமநிலையை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன் பெறலாம். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 214 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 2334 டன் காம்ப்ளகஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சனை, இரசீது இல்லாமல் விற்பனை செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்வது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது மற்றும் உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply