12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் (07.05.2024) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இந்த உலக வாழ்க்கையை முடிக்கின்ற வரை வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் படிக்கின்ற போது, வேலைக்கு செல்லும் போது என வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெற்றி தோல்வி என்பது நீண்ட கால பயணத்தில் மாறி மாறி வரும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வு.தோல்வி என்பது நேற்றோடு முடிந்துவிட்டது. அடுத்து வெற்றிக்கான தொடக்கம். இதை எப்படி வெற்றியாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும். மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.தேர்ச்சி பெறாத மாணாவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன்; திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதோடு உங்களுக்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது.
நமது மாவட்டத்தில் சுமார் 88 கல்லூரிகள் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைவருக்கும் கல்லூரியில் இடம் உண்டு. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அரசினுடைய கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.அரசு திட்டங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு கூட நன்கொடையாளர்கள் மூலமாக உதவிகள் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.படிப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். தேர்ச்சி பெறாத பாடங்களை மறுபடியும் தேர்வு எழுதுவது என்பதும் கடினமாகத் தான் இருக்கும். ஆனால் நீங்கள் தற்போது எடுக்கும் முயற்சிகள் உங்களின் நீண்ட காலத்திற்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கான இன்பத்தையும் வெற்றிகளையும் தரும்.அதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வருத்தப்பட வேண்டாம். தோல்வி என்பது நேற்றோடு முடிந்து விட்டது. நீங்கள் அடுத்த வெற்றிக்கான முதற்படியில் இருக்கிறீர்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தோல்வியை நீங்கள் வெற்றியாக மாற்ற முடியும். இந்த ஆண்டே நீங்கள் மற்ற உங்களுடைய நண்பர்களை போல உயர்கல்விக்கு கல்லூரியில் சேர முடியும். அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு அரசு நிர்வாகமும், அரசு அலுவலர்களும் எப்பொழுதும் உங்களோடு உறுதுணையாக இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.உங்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளோம். அதில் கலந்து கொண்டு அடுத்து வரும் நாட்களுக்கு தினந்தோறும் வகுப்புகளுக்கு வந்து, ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பாடங்களை கற்றுக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று, இந்த ஆண்டே கல்லூரியில் சேர முடியும்.
எனவே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு தற்போதை விட எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply