கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளைத் தரிசிப்போம்.
'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் திருப்பாவையில் இவரை போற்றுகிறாள்.
வாமனர் வடிவில் வந்த மகாவிஷ்ணு வானுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தார். இந்த காட்சியை மிருகண்டு முனிவர் தரிசிக்க விரும்பினார். இதற்காக பிரம்மாவின் வழிகாட்டுதலுடன் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள திருக்கோவிலுாரில் தவம் புரிந்தார்.
முனிவரின் மனைவி மித்ராவதியும் உடனிருந்து அன்னதானம் செய்து வந்தார். முனிவரைச் சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, அவர் முன்பு ஒரு முதியவர் முதியவர் வடிவில் தோன்றி பிச்சை கேட்டார். மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் அதை கூறினார். ஒரு நெல்மணி கூட இல்லாத நிலையில் மித்ராவதி, "நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரத்தில் அன்னம்
நிரம்பட்டும்" என்றாள். மகாவிஷ்ணுவின் அருளால் அன்னம் நிரம்பியது.உடனே முதியவராக வந்த மகாவிஷ்ணு சுயவடிவில் காட்சியளித்தார். அவரே உலகளந்த பெருமாளாக இங்கு அருள் புரிகிறார்.
மகாவிஷ்ணுவின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தியிருப்பது வழக்கம். ஆனால் இங்கு முனிவரின் உபசரிப்பால் தன்னை மறந்த நிலையில், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தி இருக்கிறார். உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்ற பெயர்கள் இவருக்கு உண்டு. மரத்தால் செய்யப்பட்ட இவரது திருமேனியே 108 திவ்யதேசங்களில் உயரமானது.
கருவறையில் மூலவர் வலது காலால் ஆகாயத்தை அளந்த படியும்,இடது காலை பூமியில் ஊன்றியும் நிற்கிறார். துாக்கிய வலது திருவடிக்கு பிரம்மா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடியின் கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா இருக்கிறார். பெருமாளுக்கு அருகில் மகாபலியின் தாத்தா பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி, மிருகண்டு முனிவர், மித்ராவதி உள்ளனர். பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரில் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.
உற்ஸவரின் திருநாமம் கோபாலன். 5 ஏக்கர் பரப்பு கொண்ட கோயிலின் ராஜகோபுரம் 192 அடி. 11 நிலை கொண்ட இக்கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம். (முதலாவது ஸ்ரீரங்கம், இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்துார்) பெருமாள் சன்னதிக்கு எதிரில் 40 அடி உயர ஒரே கல்லால் ஆன கருடத்துாண் உள்ளது.
மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை ஓணத்தன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.
கோயில் நுழைவு வாயிலின் வலப்புறம் சாளக்கிராம கிருஷ்ணர் இருக்கிறார்.
வீர ஆஞ்சநேயர்,லட்சுமி நரசிம்மர்,ராமர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.
0
Leave a Reply