சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் (03.07.2026) வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வேளாண்மை – உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, மருத்தும் – மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வி துறை, இயற்கை வளங்கள் துறை, நீர்வளத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, எரிசக்தி, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, மனித வள மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்களின் பங்கு இன்றியமையாதது. அவ்வகையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் துரிதமாக மக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது அலுவலர்களின் முதன்மை கடமையாகும். பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணவேண்டும்.
அனைத்து துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டமும் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதையும், அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னணு நிர்வாகம் மூலம் விரைவான சேவைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தூய்மை பணிகள் போன்ற பணிகளுக்கு அலுவலர்கள் முன்னுரிமை அளித்திட வேண்டும். மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் வேலை உத்தரவு பெற்றவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக முடிக்க வேண்டும்.
மேலும், பல்வேறுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதிவராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை கண்ணியமாகவும், பொறுமையுடனும் கேட்டறிந்து அவர்களுக்கு புரியும் வகையில் அதற்கான உரிய தீர்வுகளை வழங்கி, நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்ல பெயர் ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும். அதுபோல, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களில் தகுதியின்மை கண்டறியப்பட்டால் அதற்கான காரணங்களையும் விளக்கிக் கூற வேண்டும்.
எனவே, அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக திகழ வேண்டும் எனத் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திருமதி சசிகலா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கோட்டாட்சியர்கள், அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply