அதிக வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி60 அடி சாலையில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலைக்கு நகருக்குள் நுழையாமல் பஞ்சு மார்க்கெட் வழியாகச் செல்லும் மலையடிப்பட்டி 60 அடி சாலை முக்கிய போக்குவரத்துப் பாதையாக உள்ளது. இச்சாலையைப் பயன்படுத்தி ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், ரயில்வே கேட் தொடங்கி சத்திரப்பட்டி சாலை வரையிலான சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் குடியிருப்புப் பகுதிகளின் சந்திப்புகள் அருகே 15 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர். வேகத்தடைகளைக் கடக்கும்போது உடல் வலி மற்றும் எலும்பு, மூட்டு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், சாலையின் நடுவே உள்ள வாருகால் தரைப்பாலத்தின் பணிகள் முடிந்தும் இணைப்புப் பணிகள் முறையாகச் செய்யப்படாததால் கனரக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் 60 அடி சாலை சுருங்கி வரும் நிலையில், போக்குவரத்துக்கு மாற்றுப் பாதையாக விளங்கும் இச்சாலையில் உள்ள பிரச்சினைகளையும் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, தேவையற்ற வேகத்தடைகளை அகற்றி, சாலையை முறையாகச் சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0
Leave a Reply