மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 40 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தினை பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இயற்பியலில் சிறந்து விளங்கும் 40 மாணவ, மாணவியர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்திற்கு 2 நாட்கள் அறிவியல் பயணம் சென்று பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
மேலும், மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்,ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம்,u தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 22.08.2024 மற்றும் 23.08.2024 ஆகிய இரண்டு தினங்கள் 40 அரசுப்பள்ளி மாணவர்கள்ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஶ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளிமையத்தினை பார்வையிட்டனர்.இந்த அறிவியல் பயணத்தில் விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் மாணவர்களுக்கு இந்தியாவின் விண்வெளி பயணம் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விஞ்ஞானிகள் எடுத்துரைத்தார்கள்.இஸ்ரோவின் வருங்கால திட்டம் குறித்த விளக்கங்களை விஞ்ஞானிகள் வழங்கினார்கள்.
பின்பு விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு தளங்களையும் பார்வையிடுவதற்கு மாணவர்களை அழைத்து சென்றனர். ஏவுதளம் ஒன்று மற்றும் ஏவு தளம் இரண்டு இரண்டின் சிறப்புகளையும் விளக்கினர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மங்கள்யான், சந்திராயன், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவுதளம் இரண்டிலிருந்து ஏவப்பட்டதை மாணவர்களுக்கு விளக்கினார்கள். மேலும், இஸ்ரோவில் வேலைக்கு சேர்வது எப்படி என்ற வினாவுக்கும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கும், அஸ்ட்ரோநட்டாக பணியாற்றுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் மிகவும் தெளிவாக பதில் அளித்தார்கள்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
0
Leave a Reply