பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பொங்கல் பரிசுத்தொகுப்பு 08.01.2026 முதல் வழங்கப்படவுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல்-2026-க்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு, தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரூ.3000/- ரொக்கப்பரிசு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியன அடங்கிய பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத்தொகுப்பு 08.01.2026 முதல் வழங்கப்படவுள்ளது.
முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்வதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி டோக்கன்களில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெறுவதில் புகார்கள்/குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் 04562-252397 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply