நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூர் ஊராட்சி, முண்டலப்புரம் கிராமத்தில் (07.06.2024) நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பொதுவாக ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில், ஒரு ஊரில் அரசு நிகழ்ச்சி அல்லது தனியார் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் அரசும், ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த கிராமத்தில் பொதுமக்கள் இணைந்து அரசியல் பங்களிப்போடு சுமார் ரூ.50 இலட்சம் செலவில், 2300 சதுர அடி அளவில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இந்த சமுதாய நலக்கூடம் கட்டி இருக்கிறீர்கள்.
இதை இந்த கிராமத்திற்கான ஒரு சொத்து என்பதை தாண்டி, இது போன்று அரசுடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் செய்தால் இன்னும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக கொண்டு வர இயலும். மேலும் மற்ற கிராமங்களுக்கும் பல்வேறு ஊராட்சிகளுக்கும் நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று சொன்னாலும் கூட அது மிகையாகாது.
நிதித்துறை அமைச்சர் அவர்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ், மிகப்பெரிய ஒத்துழைப்பை நல்கி, தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் 100 சமுதாயக்கூடங்கள் புதிதாக கட்டியும், ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பழுது நீக்கியும், சரிசெய்தும் அதனை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும், ஒரு கிராமத்திற்கு சமுதாயக்கூடம் என்பது முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த மாதிரி ஒரு சமுதாயக்கூடம் ஏற்படுத்துவது என்பது அந்த கிராமத்திற்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைய நன்மைகளை நேரடியாகவும், மறைமுகவாகவும் செய்யக்கூடிய ஒரு அமைப்பாக உள்ளது.எனவே, இப்படிப்பட்ட கட்டிடங்களை அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாக செயல்படுத்தி வருகிறது. முழுமையாக அரசு திட்டங்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்களித்து செயல்படுத்துவதற்கு தான் நமக்கு நாமே திட்டம் அரசு வழங்கி இருக்கிறது. அதனை நன்கு பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சுமதி ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply