அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் கிராமத்தில் (14.08.2024) “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்முகாமில் பல்வேறு துறைகளிலிருந்து நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், நடைபெறும் முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதிய தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தற்போது மக்களுடன் முதல்வர் முகாம்கள் மூலம் ஐந்து அல்லது ஆறு கிராமங்களை ஒரு கூட்டாக அமைத்து ஒரு பொதுவான இடத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அதற்கான சரியான தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைகள் கிடைக்க பெறாதவர்களுக்கும், முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply