விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 இரண்டாம் நாவிருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 இரண்டாம் நா
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இரண்டாம் நாளான 28.09.2024 அன்று மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கே.அசோகன் அவர்கள் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் தலைமையில், திருமதி புல்வை செல்வ மீனாள் அவர்கள் எழுதிய அறுகு என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், பேச்சாளர் திரு.ஜோ.அருள் பிரகாசம் அவர்கள் “தமிழ்-மரபும் மண்ணும்” என்ற தலைப்பிலும், பேராசிரியர் சிவகாசி திரு.மு.ராமச்சந்திரன் அவர்கள் “மானுடக் காவல்” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற நடுவர் மற்றும் திரைப்படக் கலைஞர் திரு.மதுரை முத்து அவர்கள் “புத்தகமும் புன்சிரிப்பும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இன்றைக்கு இந்த சமுதாயத்தில் புத்தகங்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு நாளும் பல்வேறு விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி சொல்லிக் கொடுத்து கொண்டே இருக்கின்ற போதுதான் மரமும் மரபும் எப்படி வந்தது என்று அறிய முடிகிறது.முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது போன்ற கொடை தன்மை கொண்ட பல்வேறு விஷயங்களை நாம் கேட்டிருக்கிறோம். இதற்கு கொடை மடம் என்று சொல்வதுண்டு. ஒரு கொடை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தான் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் கூட அதை எல்லாம் மறந்து, அந்த குறையை போக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உதிக்கும். அது மட்டுமே ஒரு நோக்கமாக இருக்கும்.நம் மரபிலே வந்த சொற்கள் மாறுகிறது. நம் மரபிலே வந்த பழக்கவழக்கங்கள் மாறுகிறது. விஞ்ஞானம் தேவை என்று இல்லை நமது பண்பாட்டை நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் மரபும் நம் மண்ணும் எல்லா காலத்திலும், எல்லா நேரத்திலும் நம்மை மனிதனாக வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.
தற்போது இந்தியாவின் புகழ் உலகெங்கும் பரவுகிறது என்றால் அது அறிவும் படிப்பினால் தான். காற்று இருக்கிறது. அது பூவோடு சகவாசமாக வைத்தால் அது அதற்கு பெயர் வாசம். புல்லாங்குழலோடு சகவாசம் வைத்தால் அது ,சை. நம் மூக்கோடு சகவாசம் வைத்தால் அதற்கு பெயர் மூச்சு. சாக்கடையோடு சகவாசம் வைத்தால் அதற்கு பெயர் நாற்றம். நீங்கள் யாரோடு சகவாசம் வைக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கான பெயர் தீர்மானிக்கப்படும் நல்ல புத்தகங்களோடு சவகாசம் வையுங்கள் நலம் பெறுவீர்கள் என தெரிவித்தார்.
எந்த ஒரு பேதமும் இல்லாமல், எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் காக்கின்ற இயற்கை அழகு ஒன்று இருக்கிறது. ஒரு இயற்கையின் சீதனம் ஒன்று இருக்கிறது. அதற்கு சம்பளமோ, பாராட்டிப் பேசவோ, அதை உயர்த்தி வைத்து கொண்டாட வேண்டாம். குறைந்தது வேரில் தண்ணீர் ஊற்றினால் போதும் அதற்கு பெயர் தான் மரம்.மனிதர்கள் மானுடத்தை காக்க வேண்டும் என்றால் கூட ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சம்பளம் கருதி வேலை பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கருதாமல் இந்த மானுடத்தை காப்பது மட்டுமே நமது குறிக்கோளாக வைத்துக் கொண்ட , ஓரறிவு உயிர் மரம்.அந்த மரத்தால் மழை வருகிறது. அந்த மழையால் உலகம் இயங்குகிறது. மரம் மானுடத்தை காப்பதற்காக இறைவன் அனுப்பி வைத்த சீதனம். மரத்தை பாதுகாப்பதே தமது இலட்சியமாக உள்ளவர்கள் இருக்கிறார்கள். மரம் நடுவது என்பது நாம் பூமித்தாய்க்கு செய்கின்ற கைமாறு. ஒரு மரம் நட்டால் ஒரு இலட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்.
மரம் மானுடக்காவல், மரத்தின் மூலம் கிடைக்கும் மழை மானுடக்காவல். மரத்தால் கிடைக்கும் காகிதம், அதனால் உருவாக்கப்படும் புத்தகம் மானுடக்காவல். இந்த புத்தகங்கள் மூலம் கிடைக்கின்ற கல்வி, அதன் மூலம் கிடைக்கின்ற அறிவு மானுடக்காவல். மானுடன் முழுமையும் காப்பது தான் மானுடக்காவல். கல்வி என்பது எனது மனதுக்குள் இருக்கக்கூடிய அத்தனை இருட்டுகளையும் போக்குவதுதான்.பள்ளிக்கூடத்தில் படித்ததெல்லாம் மறந்த பின்னாலும், எது நினைவில் நிற்கிறதோ அதுதான் உண்மையான கல்வி. அந்தக் கல்விக்கு அடிப்படை புத்தகம். எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான மானுடக்கவால் என்பது, இந்த மானுட இனத்தில் இருக்கின்ற நல்ல மனிதர்கள், உத்தமர்கள், நேர்மையானவர்கள் தான் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் திரைப்பட கலைஞர் திரு.மதுரை முத்து அவர்கள் புத்தகமும் பொன் சிரிப்பும் என்ற தலைப்பில் பேசுகையில்:நூலகம் வைத்து வீடு கட்ட வேண்டும். சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும், நாம் நீண்ட நாள் வாழலாம். உயிருள்ள மனிதரை நீ நண்பராக்கிக் கொள்வதை விட உயிர் அற்ற புத்தகங்களை நண்பனாக ஆக்கிக் கொள். புத்தகத்தை விட ஒரு அழகான நண்பன் வேறு யாரும் கிடையாது.நூல் எழுதுவது என்பது நூல் மீது நடப்பதற்கு சமம் அந்த எழுத்தாளருக்கு. புத்தகங்களை படிக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க அந்த நபர்களோடு பேசுவதற்கு சமமானதை உணர்வீர்கள். எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அடிப்படையான விஷயம் என்பது புத்தக வாசிப்பு.கைப்பேசிகளில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து, புத்தகங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு உதாரணங்களை கூறி நகைச்சுவை உணர்வோடு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.என்.சூரியமூர்த்தி அவர்கள் வரவேற்புரையும், காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி பவித்ரா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
0
Leave a Reply