விருதுநகர் மாவட்டத்திற்கான வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு ஆய்வுக்கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தப்படுவது தொடர்பான விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் (14.08.2024) துவக்கி வைத்தார்.
2023-2024 -ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் பின்தங்கிய வட்டாரங்களை முன்னேற்றும் பொருட்டு வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை, விவசாய தொழிலாளர்கள், அரசு பள்ளி மாணவர்கள் சதவீதம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம், குடிசை வீடுகளில் குடியிருப்பு விகிதம், குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகள் விகிதம் மற்றும் மண் சாலைகள் விகிதம் அடிப்படையில் தமிழகத்தில் 50 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 450 வட்டாரங்கள் உள்ளன. அதில் நமது மாவட்டத்தில் 11 வட்டாரங்கள் உள்ளன. பொதுவாக வளர்ச்சி குறியீடுகளை பற்றி பேசும்பொழுது, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இருக்கும் வேறுபாடு ஆகும்.
மாநில அளவிலான வோறுபாடுகள், மாவட்ட அளவிலான வேறுபாடுகள் இருப்பதை போல, மாவட்டத்திற்குள் வட்டார அளவிலான வேறுபாடுகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது எனவும்,
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை, முதுகுளத்தூர் ஆகிய வட்டாரங்களில், வயதுகேற்ற உயரம் மற்றும் எடை குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், மழைப்பொழி குறைவாக உள்ள பகுதியாக மேற்கண்ட வட்டாரங்கள் இருப்பதால், மழை நீரினை சேமித்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 2023-24 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாக கொண்டு சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை மாவட்ட இலக்கு மற்றும் மாநில இலக்குகளை விட அதிகமாக அடைந்திட அனைத்து துறை அலுவலர்களும் பணிபுரிய வேண்டும்.
இரண்டு பகுதியிலும் உள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் அடிப்படை பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு வளர்ச்சி சார்ந்த குறியீடுகளை மேம்படுத்துவதற்கு என்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், தரவுகளின் அடிப்படையில் நிர்வாக செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.பின்னர், பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் தரவுகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு நடைபெறும் இக்கூட்டத்தினை அனைத்து துறை அலுவலர்களும் பயன்படுத்திக் கொண்டு, அர்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சென்னை மாநில திட்டக்குழு முழு நேர உறுப்பினர் மருத்துவர் ஜெ.அமலோர்பவநாதன், மதுரை காமராஜர் பல்கலைகழக பேராசிரியர் திரு.எஸ்.புஷ்பராஜ், ஆலோசகர் திரு.சரவணக்குமார், துணை ஆலோசகர் திரு.குமரன், மாநில திட்டக்குழு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply