காரியாபட்டி வட்டம், அழகியநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், அழகியநல்லூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் (14.08.2024) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம், வெடி விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் வீதம் முதலமைச்சர் பொது நிவாரண நிதி (உதவிதொகை) களையும், 55 பயனாளிகளுக்கு ரூ.16,14,000/- மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு நத்தம் நிலவரித்திட்ட தூய சிட்டாக்களையும், 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.42,365/- மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் NFSNM - சத்துமிகு தானியம் மற்றும் இடுபொருள்களையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.14,400/-மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி காய்கறி சாகுபடி பரப்பு விரிவாக்கத்தையும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக்கலவையையும், மீன்வளத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.3000/- மதிப்பில் கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகளையும் என 106 பயனாளிகளுக்கு ரூ.25,73,765/- மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
0
Leave a Reply