மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில், (05.10.2024) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர்; அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தன்னார்வ பயிற்சி மையத்தில் பயின்று, அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியினை பெற்ற 12 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களை உருவாக்குவது, படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது போன்றவற்றை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது.இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இரண்டு தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைந்திருக்கின்றன.
மேலும், பெண்கள் அதிகமாக பணிக்கு செல்கின்ற மாநிலமாக தமிழ்நாடு தான் திகழ்கிறது. ஒரு காலத்தில் அடுப்படியில் இருந்த பெண்கள் தற்பொழுது எல்லாத் துறைகளிலும் சென்று சாதித்து வருகின்றனர்.நீங்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரும்பும் போது, அனைவரும் தங்களது திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த வயதில் கற்றல் என்பது மிக மிக முக்கியமானதாகும். உங்களது ஆர்வத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.மேலும், இளைஞர்கள் கல்வி கற்றலை கைவிடாது தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மை ஆகும். அதே நேரத்தில் உலகத்தினுடைய மிக முக்கியமான வேலை வாய்ப்புகளை ஆய்வு செய்யும் அமைப்பான இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனேஷன் என்ற அமைப்பு பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறது. வேலை வாய்ப்பு என்பது எவ்வளவு பெரிய பிரச்சனையோ அதற்கு இணையான பிரச்சனையாக வேலைக்கான தகுதியின்மை இல்லை எனப்படுகிறது.இந்தியாவில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 33 விழுக்காடு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 60 விழுக்காடு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு 97 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்விக்கு சென்று இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக உள்ளது.
மேலும், தாங்கள் பெற்ற அறிவு, கற்ற அறிவு ஆகியவற்றை வைத்து தங்கள் திறன்களை வளர்த்து கொள்வது மிக மிக முக்கியம் ஆகும். தற்பொழுது உள்ள காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நமது திறன்களை வளர்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாக உள்ளது.மேலும், தாங்கள் அனைவரும் தொழில் தொடங்குவதற்கு, பல்வேறு திட்டங்கள் உள்ளன. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் என்னென்ன திட்டங்கள் உள்ளன, என்னென்ன கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன மற்றும் குறைந்த வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும், அரசானது பல்வேறு பயிற்சி வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அது குறித்து அனைவரும் இணையத்திலும், நாளிதழ்களிலும் நன்கு கவனித்து பயன்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், இன்றைக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வேலைக்கு தகுதியான நபர்கள் இல்லை என்பது தான். எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவை திறன்களாக மாற்றி கொள்ள வேண்டும்.
நீங்கள் அனைவரும் அறிவை திறன்களாக மாற்ற வேண்டும். உலகளவில் உள்ள வாய்ப்புகள், இந்திய அளவில் உள்ள வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், கடன் வாய்ப்புகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தங்களுடைய திறன்களை வளர்த்து முன்னேற வேண்டும்.
இந்தியாவில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் கீழ், பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக உருவாக்கி தருகின்றது. அதே போன்று, தமிழக அரசும் 20,000 முதல் 30,000 வரை வேலைவாய்ப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், தனியார் வேலைவாய்ப்பு என்பது எதிர்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்பையும், அதிகப்படியான சம்பளத்தையும் வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் வேலை வாய்ப்பு என அனைத்தும் அதிமாக இருக்கிறது. இதில் எல்லாவற்றிலும் நமது மாணவர்கள் சோம்பலை விடுவித்து, திறன்களை வளர்த்து கொண்டால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும், சுமார் 1000-த்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்து கலந்து கொண்டனர்.
0
Leave a Reply