“காபி வித் கலெக்டர்” 160-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு மின்னாற்றல் சேமித்த தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (28.03.2025) நடைபெற்ற சிறப்பு “காபி வித் கலெக்டர்” 160-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் ஆற்றல் தணிக்கை மேற்கொண்டு மின்னாற்றல் சேமித்த 40-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் மூலம் ஆற்றல் தணிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி மின்னாற்றலை சேமித்த 7 நிறுவனங்களுக்கு ரூ.44.98 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊதியப்பட்டியல் மானியம் ரூ.3 இலட்சம் மதிப்பிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 4 புதிய தொழில்முனைவோர்களுக்கு ரூ.12.50 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 41 சதவீதத்தை தொழில் நிறுவனங்களே உபயோகப்படுத்துகின்றன. எனவே தொழில் நிறுவனங்களின் மின் நுகர்வை முறைப்படுத்தி சிக்கனப்படுத்துவது அவசியமானதாகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரிப்பதற்கு மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களை சரியான முறையில் சிக்கனமாக உபயோகப்படுத்துவதற்கான பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்தி, ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளில் 75 சதவீதமும், ஆற்றல் தணிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தி மின்னாற்றலை சேமிக்கும் நிறுவனங்களுக்கு 50 சதவீதமும் தமிழ்நாடு அரசு மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலமாக அளிக்கிறது.அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை வல்லுநர்களைக் கொண்டு தொழில் நிறுவனங்களின் இயந்திரவியல், மின்னியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் இயந்திர பராமரிப்புப் பணியில் உள்ள மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான பயிற்சிகளை மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்த பயிற்சிகள் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் தங்களது நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தி மாதந்தோறும் சுமார் 3 இலட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கலந்துரையாடினார்.இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் மூலம் பெற்று வரும் பயன்கள், மாவட்டத்தில் நிறுவனங்களின் செயல்பாடு, மின்சார சேமிப்பு, வேலைவாய்ப்புகள், மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்டு வரும் மானியங்கள் உள்ளிட்டவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்(மு.கூ.பொ) திரு.ச.சரவணகணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஹேமந்த் ஜோசன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply