விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் (04.08.2025) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (04.08.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பின்னர், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமம், உட்கடை வலையப்பட்டி மெஃஸ்.டி.முத்து மீனா பயர் ஒர்க்ஸில் கடந்த 27.07.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மரணமடைந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், மஜரா வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.ஜெயராஜ் என்பவரின் வாரிசுதாரரான மனைவி திருமதி ஜானகி என்பவருக்கு ரூ.3 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலையினையும், வெடி விபத்தில் காயமடைந்த வெம்பக்கோட்டை வட்டம், விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.பவானீஸ்வரன் என்பவருக்கு ரூ.1 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலையினையும் என வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ரஜேந்திரன் அவர்கள்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply