தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பிற்கிணங்க, 10.09.2025 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 11.09.2025 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் மாவட்ட நூலக அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும் .
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு
1. வாய்மையே வெல்லும் ,2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் , 3. காஞ்சித் தலைவன், 4. அண்ணாவின் தமிழ்வளம் ஆகிய தலைப்புகளிலும்,
கல்லூரி மாணவர்களுக்கு 1. எழுத்தாளராக அண்ணா, 2. தமிழும் அண்ணாவும், 3. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 4.அண்ணாவின் மேடைத்தமிழ் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு பள்ளி மாணவர்களுக்கு
1. தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் , 2. பெரியாரும் பெண் விடுதலையும், 3. வைக்கம் வீரர், 4. சுயமரியாதை இயக்கம் ,ஆகிய தலைப்புகளிலும்
கல்லூரி மாணவர்களுக்கு 1. தன்மானப் பேரொளி, 2.தெற்காசியாவின் சாக்ரடீஸ், 3.சமுதாய விஞ்ஞானி பெரியார், 4. தொண்டு செய்த பழுத்த பழம், ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- , இரண்டாம்பரிசு ரூ.3000/- , மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000/- என்ற வீதத்திலும் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply