சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (07.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
நெடுங்குளம் ஊராட்சி நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தக் கூடம் கட்டப்பட்டு வருவதையும், தச்சக்குடி ஊராட்சி தலைப்பட்டி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.13.35 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், நடுவப்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
மேலும், நடுவப்பட்டி ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply