உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 முன்னிட்டு இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், (24.06.2025) உலக குருதிக்கொடையாளர்கள் தினம்-2025 - ஐ முன்னிட்டு, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம்களில் அதிக முறை இரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, இராஜபாளையம் ஆகிய அரசு இரத்த வங்கிகளுக்கு, வருடத்திற்கு 3 முறைக்கு அதிகமாக குருதி வழங்கிய 66 கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் ஜீன் -14 ஆம் நாளில் குருதிக் கொடையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் ரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே கொண்டாடபட்டு வருகிறது. உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை.
இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும். சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், மாவட்டத்தில் ஜீன் மாதத்தில் இதுவரை இரத்தத்தான கொடையாளர்களால் 700 யூனிட்டிற்கும் அதிகமாக இரத்தம் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலசு சார்பில், மாவட்ட அளவிலான எச்.ஐ.வி.ஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி மரு.யசோதாமணி, மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அரவிந்த் பாபு, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் திருமதி மரு.ஆனந்த ஈஸ்வரி, மாவட்ட மேற்பாவையாளர் திரு.அய்யனார், மருத்துவர்கள், செவிலியர்கள், இரத்ததான கொடையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply