போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் அங்கன்வாடி மையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் (12.10.2025)பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS.,அவர்கள்தலைமையில்வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விருதுநகர், மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,137 மையங்கள் மூலம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 1,30,437 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும்,46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள பந்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 28 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 22 மையங்கள் மற்றும் 2 நடமாடும் குழுக்கள் மூலமும், பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 13 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு, மலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 11 மையங்கள், அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 17 மையங்கள் மற்றும் 1 நடமாடும் குழு என மொத்தம் 96 குழுக்கள் மூலம் 364 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 5 வயதிற்குட்பட்ட சுமார் 11,676 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.எனவே, பொதுமக்கள் அனைவரும் 5 வயதிற்குட்ட தங்கள் குழந்தைகளை போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கி, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு.ராஜமாணிக்கம் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply