நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தினை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் (17.06.2025) விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன்ரெட்டி,I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.பின்னர், நகர நிலவரித்திட்டத்;தின் கீழ் 100 பயனாளிகளுக்கு இணைய வழிப்பட்டாக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு துறையை நவீன மயப்படுத்தவும், பொது மக்களுக்கு எளிதாக திட்டங்கள் மற்றும் சேவைகள் செல்லக்கூடிய பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.அதனுடைய ஒரு பகுதியாக தான் இந்த அளவீடு எடுப்பதற்கு, ட்ரோன் மூலமாக விருதுநகரை நில அளவு செய்து ஒவ்வொரு இடமும் எவ்வளவு இருக்கிறது என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கெடுத்து, வரைபடத்தோடு கொடுக்க வேண்டிய இந்த பணிகளை இன்றைக்கு நமது மாவட்டத்தில் தொடங்கி இருக்கிறோம்.ஒவ்வொரு வீடாக சென்று அதிகாரிகள் அளவீடு செய்து வரைபடத்தோடு இருக்கக்கூடிய திட்டத்தை செய்து முடிக்கவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 10 நகரங்களில் இந்தப் பணியை முதலில் எடுத்திருக்கின்றோம்.
இது பொதுவாக பார்த்தோம் என்று சொன்னால், கிராமம் மற்றும் நகரங்களில் நம்முடைய இடத்திற்கு ஒரு துல்லியமான அளவீடு செய்வதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் ஒவ்வொருவருடைய இடத்தையும் அரசாங்கம் சட்டபூர்வமாக அளந்து கொடுக்கின்ற நேரத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராத சூழ்நிலையை நாம் உருவாக்க இருக்கின்றோம்.அதே போல இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற பணியை அரசு முனைப்போடு செய்கிறது. பட்டா வழங்குவது மட்டுமல்லாமல், நிலம் வாங்குதல், நிலத்தை மாறுதல், பாகப்பிரிவினை போன்ற பட்டா மாறுதல் செய்கின்ற பணிகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.67 கோடி நபர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக சராசரியாக இருக்கக்கூடிய மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இருக்கிறார்கள். அந்த ஆணையின்படி நாங்களும் செயல்படுகிறோம். அரசு அதிகாரிகள் முனைப்போடு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நில ஆவணங்களையும் பாதுகாத்து, நில உடமைதாரர்களுக்கு அந்த நிலம் தொடர்பான பட்டா, அ-பதிவேடு, வரைபடங்கள், கிராம வரைபடம், தாலுகா வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் வழங்கும் செயல்பாடுகளில் மிக முக்கியமானதாகும்.
கடந்த காலங்களில் நிலம் தொடர்பான எந்த சேவையாக இருந்தாலும், தொடர்புடைய அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் அளித்து பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனை மாற்றி நில அளவை துறையின் மூலமாக செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் இணைய வழியாக அவர்கள் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பித்துக் கொண்டு அதன் மூலமாக இத்துறையின் சேவைகளை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றது.ஒவ்வொரு மனுதாரரும் பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பம் கொடுத்த நாட்களில் இருந்தது 30 நாட்களுக்குள் 90 சதவீதம் விண்ணப்பங்களுக்கு உட்பிரிவு செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக 3 இலட்சம் பட்டா மற்றும் ஆணைகள் வருவாய்த்துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பட்டாவுடன் புலப்படமும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளை செய்யப்பட்டிருக்கின்றன.
நில அளவையை மேம்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக துறையை மேம்படுத்துவதற்கான சில முக்கியமான முடிவுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். அதில் மிக முக்கியமானது அனைத்து மாவட்டங்களிலும் டி.ஜி.பி.எஸ் என்ற நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு, நில உரிமையாளரின் நிலத்தின் எல்லைகளை அவர்கள் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் காண்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்கு உண்டான அளவுகளை Latitude - Longitude விபரங்களுடன் புலத்திலேயே துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.
இது போன்று நகரப் பகுதிகளில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம்(மறைமலை நகர்), காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம்(காரைக்குடி), தூத்துக்குடி மாவட்டம்(கோவில்பட்டி), கோயம்புத்தூர் மாநகராட்சி(7 வார்டுகள்), விருதுநகர் ஆகிய 10 நகரங்களில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதில் விருதுநகர் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களால் இந்த திட்டம் துவக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு வார காலத்திற்குள் இந்த ட்ரோன் சர்வே முடிந்த பிறகு ஆறு மாதத்திற்குள் அளவு எடுத்து நில உரிமைக்கான சான்றுகள், வரைபடங்களின் தரவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இப்படி பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்படுகின்றன. இவை அனைத்தையும் பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply