25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 01, 2026

சட்டமன்றத் தேர்தல் 2026,அரசியல் விளம்பரங்களுக்கு MCMC குழுவின் முன்அனுமதி கட்டாயம்.

 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 - ஐ, முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் (Ground Floor) "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: 1. மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள் (Electronic & Social Media):          தொலைக்காட்சி, உள்ளூர் கேபிள் டிவி, வானொலி (FM), சமூக வலைத்தளங்கள் (Facebook, X, Instagram, YouTube), இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களிலுள்ள டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் போன் வழி குறுஞ்செய்திகள் (Bulk SMS), குரல் வழி அழைப்புகள் (Voice Calls) ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் MCMC அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.விண்ணப்பிக்கும் காலக்கெடு:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்: விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்குக் குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள்: குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். 2. அச்சு ஊடகங்களுக்கான விதிகள் (Print Media - நாளிதழ்கள்):          சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்). ஆனால், வாக்குப்பதிவு நாள் (Poll Day) மற்றும் அதற்கு முந்தைய நாள் (Poll Day-1) ஆகிய இரண்டு தினங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் கட்டாயம் MCMC அனுமதி பெற்றிருக்க வேண்டும். 3. விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்:          விண்ணப்பதாரர்கள் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைத்தளத்தில் இயங்கும் MCMC அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.விளம்பரத்தின் மாதிரி நகல் (வீடியோ/ஆடியோ எனில் CD/Pendrive-ல் 2 பிரதிகள்; அச்சு விளம்பரம் எனில் மாதிரி தாள்).விளம்பரத்தின் உரை (Script) மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு.விளம்பரம் யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை என்பதற்கான உறுதிமொழி மற்றும் பதிப்புரிமைச் சான்று. 4. சட்ட நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு:அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தேர்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன்,  சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 31, 2026

சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் முன்னேற்பாடு பணிகள்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை  முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள,  7 சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல்  (30.03.2026) தொடங்குகிறது.இதனை முன்னிட்டு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்) மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்களது மனுக்களைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.ஆய்வின் சிறப்பம்சங்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் அறையைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளருடன் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் நபர்களின் கட்டுப்பாடு குறித்து காவல் துறையினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.பதிவு முறைகள்: வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு முழுமையாக வீடியோ பதிவு (Videography) செய்யப்படுவதையும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆட்சியர் உறுதி செய்தார். உதவி மையங்கள்: வேட்பாளர்களுக்குத் தேவையான படிவங்கள், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை வழங்க பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள்: அலுவலகத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி நேர்மையான முறையில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் (தேர்தல் நடத்தும் அலுவலர்), வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Mar 31, 2026

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் .

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.வேட்புமனு தாக்கல் கால அட்டவணை மற்றும் இடங்கள்:          இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்பாளர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்கள்:இராஜபாளையம்: இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.சாத்தூர்: சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.சிவகாசி: சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.விருதுநகர்: விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.திருச்சுழி: திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.விடுமுறை நாட்கள் மற்றும் கடைசி நாள்: 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், அரசால் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:நபர்களின் எண்ணிக்கை: வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் செல்ல அனுமதி உண்டு.வாகனக் கட்டுப்பாடு: தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்புமனு தாக்கல் நடைபெறும் அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 30, 2026

கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லவும், கடின உழைப்பு மேற்கொள்ளவும் தவிர்க்க வேண்டும் உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இலகுவான, வெளிர் நிறம் கொண்ட பருத்தி உடைகள் அணியவும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, கண்ணாடி, காலணிகள் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் (12 மணி – 3 மணி) வெளிப்புற வேலைகளை தவிர்க்கவும். பயணிக்கும் போது போதுமான குடிநீர் எடுத்துச் செல்லவும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும் ஆல்கஹால், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்கள் தவிர்க்கவும். லஸ்ஸி, நீர்மோர், எலுமிச்சைச்சாறு போன்ற நீர்ச்சத்து பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும். வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள் மற்றும் சன்ஷேட்கள் பயன்படுத்தவும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகில் விட வேண்டாம். வேலை நேரத்தில் யாராவது மயக்கம் அடைந்தால், உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி தண்ணீர் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளவும். வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் (ORS) போதுமான அளவில் தயாராக கையிருப்பு உள்ளன. பொதுமக்கள் மேற்கண்ட அறிவுரைகளை கடைப்பிடித்து வெப்ப அலை தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 28, 2026

தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களைத் திரும்பப் பெற மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைப்பு  .

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் உள்ளன. இதன்படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்)-க்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்)-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களையோ கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், தேர்தல் பறக்கும் படையினர் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் (Static Surveillance Teams) அவை கைப்பற்றப்படுகின்றன.இவ்வாறு சோதனைகளின் போது கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெறுவதற்காக, "மாவட்ட குறைதீர்க்கும் குழு / கைப்பற்றுகை விடுவிக்கும் குழு" (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து, இக்குழுவின் தலைவரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் அவர்களிடம் தங்களது பணம் அல்லது பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் விவரம் பின்வருமாறு:திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.கைபேசி எண்: 7373704226திரு.A.வெங்கடேஷ்வரன்,மாவட்ட கருவூல அலுவலர், விருதுநகர்.கைபேசி எண்: 9095315660திருமதி.S. விசாலாட்சி, கணக்கு அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.கைபேசி எண்: 9677527120எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணத்தையோ அல்லது பொருட்களையோ கொண்டு சென்று தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Mar 27, 2026

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி "Our Vote Our Voice" - விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்ட விழிப்புணர்வு.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (26.03.2026) இளைய தலைமுறை வாக்காளர்களுக்கான பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து, "OUR VOTE OUR VOICE" (நமது வாக்கு நமது குரல்) என்ற தேர்தல் முழக்க வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றினர்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின்வரும் தேர்தல் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.  "இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது நிலையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என உறுதி கூறுகிறோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல் எங்களது வாக்கினைப் பதிவு செய்வோம்." வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்."வாக்களிப்பது நமது உரிமை", * "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "ஜனநாயக கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியப் பலகைகளை ஏந்தி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி போட்டிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் அரசுத் துறை உயர் அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Mar 27, 2026

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 31.03.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் மகாவீரர் ஜெயந்தி தினமான 31.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார் மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11   ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சியர் திரு.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார். 

Mar 27, 2026

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது .

Tதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, “கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள்–2026 (LEARN TO SWIM)” ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான விடுமுறைக் காலத்தில், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் 'நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பை நடத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் 5 தொகுதிகளாக நடத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளுக்கான முதல் தொகுதியானது 01.04.2026 முதல் 16.04.2026 வரையிலும், இரண்டாம் தொகுதி 17.04.2026 முதல் 02.05.2026 வரையிலும், மூன்றாம் தொகுதி 03.05.2026 முதல் 16.05.2026 வரையிலும், நான்காம் தொகுதியானது 17.05.2026 முதல் 31.05.2026 வரையிலும், ஐந்தாம் தொகுதியானது 02.06.2026 முதல் 14.06.2026 வரையிலும்  நடைபெற உள்ளது.   நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3.30 மணி முதல் 4.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்கான  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.1770/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும்  கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் மேற்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கலாகிறது.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் நீச்சல் பயிற்றுநர் திரு. சுப்ரமணியன் அவர்களை 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S .,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2026

கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் , மாவட்ட ஆட்சியர் , அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் (25.03.2026), மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்தத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சீரற்ற (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதன்படி, மாவட்டத்தில் உள்ள: * 202-இராஜபாளையம்: 269 வாக்குச்சாவடி மையங்களுக்கு 322 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 349 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *203-திருவில்லிபுத்தூர்: 308 வாக்குச்சாவடி மையங்களுக்கு 369 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 400 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். * 204-சாத்தூர்: 291 வாக்குச்சாவடி மையங்களுக்கு 349 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 378 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். * 205-சிவகாசி: 288 வாக்குச்சாவடி மையங்களுக்கு 345 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 374 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *206-விருதுநகர்: 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு 337 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 365 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.  *207-அருப்புக்கோட்டை: 270 வாக்குச்சாவடி மையங்களுக்கு 324 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 351 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள். *208-திருச்சுழி: 292 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்.மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 2,596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்த இயந்திரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பாதுகாப்பறையில் இருந்து இன்று (25.03.2026) அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு, தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.அதனடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பின்வரும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறைகளில் வைக்கப்படவுள்ளன: *இராஜபாளையம்: இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். * திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம். * சாத்தூர்: சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம். * சிவகாசி: சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. * விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி. * அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம். * திருச்சுழி: காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.இந்த இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர சிசிடிவி (CCTV) கண்காணிப்பில் வைக்கப்படும். பின்னர், தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. சீனிவாசன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 26, 2026

சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026-னை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை  (25.03.2026) சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இஃர்பான்,I A S ., அவர்கள் தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களிடையேயும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியைச் சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, "வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. செந்தில், மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கப் (உரிமைத் திட்டம்) பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 122 123

AD's



More News