சிவகாசி சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்(26.07.2024) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, பாதுகாப்பான பயணம் மற்றும் நெரிசலற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தின் நெடுஞ்சாலை தொடரமைப்பு உருவாக்குவது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் செயலாற்றி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அடர்ந்த மக்கள்தொகையும், ஏராளமான பட்டாசு மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் கொண்ட ஒரு தொழில் நகரமாகும். சாட்சியாபுரம் கடவு எண் 427-ல் உள்ள பாதை இரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி பல தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, இன்று திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் -அருப்புக்கோட்டை - திருச்சுழி - நரிக்குடி - பார்த்திபனூர் சாலை 18ஃ4-ல் கடவு எண்.427-க்கு மாற்றாக இரயில்வே கி.மீ. 563ஃ100 - 563ஃ200-ல் சிவகாசி மற்றும் திருவில்லிபுத்தூர் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுமார் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் இந்த சாலையினை பயன்படுத்தும், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய நகரங்களுக்கு தடையில்லாமல் எளிதாக செல்ல முடியும்.எனவே, இந்த பகுதியில் இடையூறு இல்லாமல் போக்குவரத்தை தடையின்றி மேம்படுத்துவதற்கு இந்த இரயில்வே மேம்பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவித்தனர்.
மேலும், இந்த சாட்சியாபுரம் புதிய பாலம் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், சிவகாசியில் வெளி சுற்றுச்சாலை, திருத்தங்கல் மற்றும் சாத்தூரில் மேம்பாலங்கள், மல்லாங்கிணர் மற்றும் வத்திராயிருப்பில் புறவழிசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சென்றுவர ஏதுவாக தேவையான இடங்களில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.
0
Leave a Reply