முதியோர்களும் தடுப்பூசியும்....
முதியோர்கள் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும், சில நேரங்களில் உயிரிழப்பதற்கும் தொற்று நோய்கள் முக்கிய காரணமாக உள்ளன. இத்தகைய நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முதியோர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
வயது அதிகரிக்கும்போது நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறைகிறது. சத்துணவுக் குறைபாடும் இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும், முதுமையில் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களாலும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தோல் மென்மையாகி, எளிதில் சிராய்ப்பு மற்றும் புண்கள் ஏற்படலாம்.
ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக சிறுநீர் தேங்குவதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
பெண்களுக்கு ஹார்மோன் அளவு குறைவதால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு தொற்று நோய்கள் உருவாகலாம்.
நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சினைகள், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடும்.
முதுமையில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள்
நெஞ்சகத் தொற்றுகள்:
ஃப்ளூ, நிமோனியா, காசநோய் போன்ற நோய்கள் முதியோர்களை அதிகம் பாதிக்கக்கூடும்.
சிறுநீரகப் பாதைத் தொற்றுகள்:
ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பி வீக்கம், பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுக்குப் பிறகு ஏற்படும் உடல் மாற்றங்கள், நீரிழிவு நோய் போன்ற காரணங்களால் சிறுநீர்ப் பாதைத் தொற்றுகள் ஏற்படலாம்.
வயிறு மற்றும் குடல் சார்ந்த தொற்றுகள்:
டைபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட குடல் சார்ந்த தொற்றுகள் கெட்டுப்போன உணவு அல்லது அசுத்தமான குடிநீரால் ஏற்படலாம்.
தோல் சார்ந்த தொற்றுகள்:
நீரிழிவு நோயாளிகளுக்கு தோலில் படை, சிறு கொப்புளங்கள் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படலாம். அக்கி அம்மை போன்ற நோய்களும் முதுமையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதர தொற்றுகள்:
சில சமயங்களில் மூளை, எலும்புகள் மற்றும் இதய வால்வுகளிலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்!
“நோய் தடுப்பு என்பது குழந்தைகளுக்கு மட்டுமே” என்ற காலம் மாறிவிட்டது. முதியோர்களுக்கும் தடுப்பூசிகள் அவசியமானவை.
சில தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, ஆரோக்கியமாக வாழ முடியும். முதுமைக் காலத்தில் சீரான உணவு, போதிய உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவப் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் வயதுக்கும் உடல்நிலைக்கும் ஏற்ப தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதும் முக்கியம்.
முதியோர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்! தொற்று நோய்களைத் தடுப்போம்!
மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோம்!
0
Leave a Reply