2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (31.01.2025) தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக சிறப்புறையாற்றினார்கள்.
அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
திருக்குறள் என்பது இலக்கிய நூல் மட்டுமல்ல. அது உலகப் பொதுமறை நூலாகும் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் ஏராளமான நிகழ்வுகள், இலக்கிய விழாக்கள் நடந்திருந்தாலும், தமிழ்நாடு அரசினுடைய சார்பில் தீராக் காதல் திருக்குறள் என்கின்ற தலைப்பில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் உடைய ஒரு பகுதியாக திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெறுவது என்பது சால சிறந்த ஒன்று.உலக பொதுமறை நூலக இருக்கக்கூடிய திருக்குறளுக்கு புகழ் சேர்த்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும், கலைஞரின் உடைய உரைகளாக இருந்தாலும், குறளோவியமாக இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் சாலச் சிறந்ததாக அமைந்திருக்கக்கூடிய, தென்கோடி முனையில் குமரியில் அமைந்திருக்கக்கூடிய வானளாவிய வள்ளுவர் சிலையாக இருந்தாலும், இவையெல்லாம் கலைஞர் அவர்கள் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றி நமக்கு வழங்கிய கொடைகள்.
வருங்காலத்தில் உயர்கல்விக்கு செல்லும் பொழுது புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவைகள் மூலம் உங்களில் பலர் நிச்சயம் பயனடைவீர்கள். அதற்கு முன்னோட்டமாகவும், அதே நேரம் தமிழ் மீதான உங்களுடைய ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தான், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தி அதில் 1500 மாணவர்களை தேர்வு செய்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1500/- வழங்கப்படுகிறது.
அதற்குரிய முன்னெடுப்புக்காக தீராக் காதல் திருக்குறள் என்ற திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு உருவாக்கிய பெருமை இதே மாவட்டத்தைச் சேர்ந்த மைந்தன் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை சேரும். தந்தை பெரியார் 1925-ல் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்புதான் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் தொடங்குகிறது. அதற்கு முன்பு திருக்குறளுக்கு எழுத்தப்பட்டியிருந்த உரைகளை குறிப்பிட்டு, விமர்சிக்க தொடங்கிய பெரியார் அவை திருக்குறளின் மூலக்கருத்துக்கு எதிராக இருப்பதை எடுத்துச் சொன்னார்.
1999-ம் ஆண்டு இறுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திற்கு பொதுமறையை தந்த அய்யன் வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உலக தமிழர்களை உற்சாகப்படுத்தினார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அச்சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாட்டின் உடைய முதலமைச்சர் அவர்கள் 25-ஆம் ஆண்டு விழாவை எடுத்து அய்யன் வள்ளுவரையும், திருக்குறளையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்தினார்.இப்போட்டியில் உங்களுக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களுக்கான வெற்றி அல்ல. தமிழுக்கான வெற்றி. தமிழ் தொடர்ந்து வெல்லட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியினுடைய 90 விழுக்காடு, நீங்கள் பெற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் நிகழ்ச்சிகள், உங்கள் பங்கேற்பு, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருக்கிறது.தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறளையும், தமிழ் இலக்கியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழ் இலக்கியத்தில் இருக்கக்கூடிய பெருமைகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அடுத்த 50, 60 ஆண்டுகளுக்கு உங்களுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மொழியை, இலக்கியத்தை, தமிழில் மொழி தரக்கூடிய வழுமியங்களை, திருக்குறள் தரக்கூடிய உயர்ந்த செம்மார்ந்த அனுபவங்களை, நீங்கள் கைக் கொண்டு உயர்வதற்கும், நீங்கள் வழி காட்டுவதற்கும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமையும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள சுமார் 1000- க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply