மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 6,27,823 நபர்கள் பயனடைந்துள்ளனர்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”;
நோய் என்ன? நோயிக்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஒப்ப, தமிழக அரசு பதவியேற்று மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து சிறப்பாக பணியாற்றி நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டு, தொற்றா நோயாளிகளின் தன்மை அறிந்து, அவர்களின் அலைச்சலையும், மன உலைச்சலை தவிர்க்கும் வண்ணம், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இந்தியாவிலேயே முதன் முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம்” என்ற உன்னதமான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
‘மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டம் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம்தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் தமிழகத்தில் ரூ.1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் கீழ், 3,31,833 நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தினாலும், 1,52,307 நபர்கள் நீரிழிவு நோயினாலும், 1,43,683 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டு என மொத்தம் 6,27,823 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், 130 -ற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள், 55 செவிலியர்கள், 13 பிசியோதெரபிஸ்ட், 11 வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், 205 இடைநிலை சுகாதார பணியாளர்கள், 245 பெண் சுகாதார தன்னார்வலர்கள் ஆகியோர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றினார்கள்.
0
Leave a Reply