வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளர் , வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளர்/வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் திரு. அ.சிவஞானம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR)- 2027 பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் (21.11.2026) நடைபெற்றது.கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளர்/வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் திரு. அ.சிவஞானம் I A S., அவர்கள் தெரிவித்ததாவது,
இந்தியத் தேர்தல் ஆணையம், 01.01.2027 ஆம் தேதியைத் தகுதி பெறும் நாளாகக் கொண்டு, தகுதியுடைய அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், 2027 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அறிவித்துள்ளது.இத்திருத்தப் பணியின்போது, 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுடைய குடிமக்கள் அனைவரையும், அவர்கள் வழக்கமாக வசிக்கும் முகவரியின் அடிப்படையில், உரிய தனிநபர் விண்ணப்பங்களைப் பெற்று, வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முறையான விசாரணை மற்றும் சரிபார்ப்புக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்களின் வசதிக்காக, 21.11.2026, 22.11.2026 மற்றும் 29.11.2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
அன்றைய தினங்களில், சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), பொதுமக்களிடமிருந்து உரிய வகையில் படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றின் மூலம் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.மேலும், இப்பணியில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலும் போதுமான எண்ணிக்கையில் சம்பந்தப்பட்ட கட்சியினரால் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA) நியமிக்கப்பட்டுள்ளனர்.விண்ணப்பதாரர்கள் உரிய படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கான சான்றாக ஒப்புகைச் சீட்டினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுபோக நம்முடைய விண்ணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வலைதளத்தின் மூலமாகவும் ECINET என்ற mobile app மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.
எனவே, 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுடைய இளம் வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான 11.12.2026 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் கள விசாரணை மற்றும் தேவைப்படும் இடங்களில் வீடு வீடாகச் சென்று விசாரணை செய்யப்படும். உரிய விசாரணை மற்றும் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியுடைய நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 04.01.2027 அன்று திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக ஏதேனும் குறைகள், புகார்கள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தமது கவனத்திற்குக் கொண்டு வரும் பட்சத்தில், அவற்றின் மீது மாவட்டத் தேர்தல் நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளர்/வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply