ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக செவிலியர் பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய நலவாழ்வுக் குழுமம் – தமிழ்நாடு (NHM-TN), சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வுச் சங்கங்கள் மூலம், இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர் – மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட), தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிகமாக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கான மொத்த காலி பணியிடங்கள் 59 ஆகும். மாத ஊதியமாக ரூ.21,000/- வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 50 வயது வரை. இதற்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயப் படிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) – அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரி – மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் / மாவட்ட வாரியான மற்றும் நிறுவன வாரியான காலியிடங்கள் விவரம் தேசிய நலவாழ்வுக் குழுமம் (https://nhm.tn.gov.in/) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர்/ பொது செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம் / விருதுநகர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / நகர நலவாழ்வுச் சங்க அலுவலகத்திற்கு 04.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலானவை. பணி நிரந்தரம் கோர எவ்வித உரிமையும் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்கள் அரசாணை எண் 427 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை நாள்: 18.11.2026 படி பணியமர்த்தப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply